மேலாண்மை பொன்னுச்சாமி
97
என் காலடி நிழலில் பொங்கல் வைத்து எனக்கு மரியாதை செய்வார்கள்.
எல்லாம் போய்விடும். இனி எனக்கு நாதியில்லை. என்னைப் பிள்ளை மாதிரி அணைத்துக் கொண்டு... ‘வெட்டாதீங்கடா’ என்று மல்லுக்கட்ட சின்னக்கனி நாடார் இல்லை, என்னை உயிரென நினைத்துத் துடிக்கிற இதயம் நின்று போயிற்று. என்னைக் காப்பாற்ற ஆளில்லை.
என்னை விற்றுவிடுவார்கள். வெட்டி ஆறப்போட்டுப் பலகை பலகையா அறுத்துப் போட ஆள் தயார். எமன் ரெடி. நான் என்ன செய்ய..?
நான் இல்லாவிட்டால், என் நாயகன் வரமாட்டானே... மழையில்லாவிட்டால் மண் என்னாகும்...? மனிதன் என்னாவான்...? மரங்கள் இல்லாத உலகத்தில் சுத்தமான காற்றே இருக்காதே... காற்று இல்லாமல் மனிதன் எதைச் சுவாசிக்க..? எப்படி உயிர் வாழ..?
எனக்குள் பயம். வேரின் நுனிவரை அச்ச நடுக்கம். பயத்தின் படபடப்பில் என் பூக்களெல்லாம் உதிர்ந்தன. என் கண்ணீராக... துருத்தி நின்ற பிசின்.
என்னைச் சுற்றி வட்டமாகக் குழி தோண்டுகிறார்கள். முழங்கால் உயரத்துக்கும் மேலான ஆழக்குழி. குழிக்குள் நின்று..எனது கணுக்காலைப் பார்க்கிறார்கள். ஆணிவேர் முடிச்சு. அதுதான் என் உயிர் முடிச்சு.
அங்கே கோடாரியால் போடுகிறார்கள். டங்... டங்கென்று, அலறித் துடிக்கிற உயிர். என் ரத்தச் சதைகளாகத் தெரிகிற சந்தன நிறச் சிறாய். ஈர ரத்தம் மின்னுகிற சிறாய்த் துண்டுகள். உயிர்த்துளிகள். சதைச்