உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்டாது


றெக்கையடிக்கிற சேவலின் உற்சாகச் சடசடப்பு, தொடர்ந்து எல்லாரையும் உசுப்பி விடுகிற ‘கொக்கொரக்கோ’ கூவல்.

கர்வமாய் கூவிய சேவலை யாரோ அதட்டுகிறார்கள். ‘கேர்...கெக்கேர்... கேர்’ என்று பயத்தில் வீறிடுகிறது. குதித்துத் தாவி ஓடுகிற சத்தச் சலனம்.

அந்தச் சேவலின் றெக்கையடிப்பிலேயே முழிப்பு தட்டிவிட்டது வடிவுக்கு. எந்திரிக்கவே மனதில்லை. பகலிலும் ரவ்விலும் பட்ட பாடுகள். காட்டிலும் வீட்டிலும் உழைத்த அலுப்பு. உறங்கிய களைப்பு.

அப்படியே நினைவின் மடியில் மனசு கண் சொருகி, துவண்ட உடம்பின் மயக்கத் திளைப்பில் கிறங்கிக் கிடக்கணும் போல ஏக்கமாய் இருக்கிறது. உறக்கச்சடவில் முகம் புதைத்து, சர்க்கரைப் பாகுக்குள் சிக்கிய எறும்பாக மயங்கிக் கிடக்க ஆசை.

சேவலின் ரெண்டாவது கூவல். கோழியின் ஆச்சர்யத் தொனியிலான கத்தல்கள், குஞ்சுகளின் மகிழ்ச்சியான ‘கீச்... கீச்...’ பால்கேன்கள் குலுங்கிக் கிலுகிலுக்க, விரைகிற டி.வி.எஸ்.50ன் இரைச்சல். எருமை மாடுகளின் ‘தகக், தக், தக்..’ இயங்கும்புற உலகத்தின் சத்த முகங்கள். லௌகீக வாழ்வின் சாட்டைக் குத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/114&oldid=1810586" இலிருந்து மீள்விக்கப்பட்டது