108
காகிதம்
இருட்டு விலகாத விடியல். நெட்டி முறித்து, உறக்கச் சடவைக் கழுவிக் கொண்டு இயங்கத் தொடங்கிவிட்ட கிராமத்துச்சலனம். சத்த சலனம்.
கூத்துவன் பண்ணிய அலங்கோலத்தையும், கோண எழுத்தையும் எண்ணிய மனவிசாரம். அதிலேயே நனைந்து துவண்டு கிடந்த வடிவு.
“வடிவு...ஏய்...வடிவு”
கதவைத் தட்டுகிற சத்தம். ஒரு பெண்ணின் குரல்.
“என்னக்கா?”
“இன்னும் எந்திக்கலியா?”
“ம்ள்ச்சூ! எந்திரிக்கணும்”
சோர்வும் சலிப்புமாய் சரிந்த குரல்.
“என்ன வடிவு, ஆறுமணி வேலைக்குப் போவனும்லே? வரல்லியா? புஞ்சைக்கார நாயக்கரு நாற வசவு வையப்போறாரு”
நிஜமாகவே அதிர்ந்து போனாள். சட்டென்று மூளையில் தாக்கிய நினைவு.
“ஐயய்யோ-! அந்த ஆவுகமே (ஞாபகம்) இல்லேக்கா. இந்தா வந்துட்டேன்க்கா”
பதைத்துப் போய் ‘தடபுட’வென்று எழுந்தாள், வடிவு.
நாயக்கர் புஞ்சையில் பருத்தி விதை ஊன்றப்போக வேண்டும். காலைக் கரண்டு. ஆறு மணி முதல் மதியம் வரை ‘த்ரீ’ பேஸ் மோட்டார் ஓடும். வாய்க்கால் நிறைய ஊர்ந்து வருகிற தண்ணீர். பாத்தி பாத்தியாகப் பாயப்