உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

109


பாய... ஈரச்சகதிக்குள் விதை ஊன்றணும். சாணத்தில் புரட்டி, உலர வைத்த பருத்தி விதை.

விதை ஊன்றுகிற முதல் நாளிலேயேதாமதமாய்ப் போனால்...அம்புட்டுத்தான். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ‘தங்கு, புங்கெ’ன்னு குதிப்பார் நாயக்கர்.

சும்மாவே எல்லாரையும் வைவார். பேர் சொல்லியே கூப்பிடமாட்டார். ஏதாச்சும் வசவுதான். அவருக்கு இவர்கள் வைத்திருக்கும் பட்டப் பெயரே ‘நாறவசவு நாயக்கர்’தான்.

“நல்ல நாள் பார்த்து, விதை ஊனுற மொத நாளு. இன்னிக்கே லேட்டாய் வர்ற. வெள்ளாமை விளங்குன மாதிரித்தான்” என்று சீறிச் சினந்து தெறிப்பார்.

நினைத்தாலே-நடுக்கமாக வருகிறது வடிவுக்கு.

அவசர அவசரமாகத் தலையை அள்ளி முடிந்தாள். கதவைத் திறந்தால், வந்து மோதிஅப்புகிற இருட்டு. பொழுதுக் காலைக் கண்ட பயத்தில் முகம் வெளுக்கிற வைகறை இருட்டு.

சொஸைட்டியிலே போய் பால் வாங்கணும். காப்பி போடணும்.சோற்றுக்கு உலை வைக்கணும். ஒரு குழம்புப்பாடு பாக்கணும். ஓடைக்குப் போய்விட்டு வரணும். அள்ளி வயிற்றில் கொட்டணும். அரக்கப் பரக்க ஓடணும்.

இத்தனை‘ணும்’களும் முக்கால் மணி நேரத்திற்குள் முடிந்தாகணும், காலில் சக்கரம் கட்டிப் பறக்கணும்.

சாட்டைச் சுழற்சியாக அவளை முடுக்குகிற புற உலக நிர்ப்பந்தம். சுவிட்சைத் தட்டினால் சுழன்றோடுகிற பம்ப் ஷெட் மோட்டாரைப் போலச் சுற்றியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/122&oldid=1810597" இலிருந்து மீள்விக்கப்பட்டது