மேலாண்மை பொன்னுச்சாமி
111
இருக்க நானா பிரியப்பட்டேன்? என் வாழ்க்கையே வெறும் வாழ்க்கையாகிப் போன கொடுமைக்காக இரக்கப்படக்கூடாதா? நாதியற்றுப் போன பாவத்துக்குப் பரிதாபப் படக்கூடாதா? ஆண் துணையே அற்றுப்போய் வயதும் உடம்பும் காட்டு நிலாவாக வீணாகிப் போகிற விதிக்கொடுமைக்குக் கருணை காட்டக் கூடாதா?
மனுசத்தன்மையில்லாத மனுசங்களா? கருணை காட்டவேண்டிய பரிதாபத்திற்குரிய பலவீனமான ஜீவனை... சகுனம் பார்த்து வெறுப்பது என்ன நியாயம்? என்ன மனுசத்தனம்? ச்சேய்!
இப்படியெல்லாம் நினைத்து... இப்போது ஆத்திரப்பட முடிகிறது. கோபப்பட முடிகிறது. ஆனால்..
அந்தக் கணத்தில்...
‘வெறுவாய்க்கட்டகழுதை’ என்ற வசவுச்சொல்லை வெட்கங்கெட்ட துணிச்சலோடு அவன் சொல்கிறபோது-
சீறிச் சினந்து, காறிக் காறித்துப்புகிற அத்துமீறலான அந்த நிமிஷத்தில்...
அவமானமாக உணர்வாள். பிறந்த பிறப்பின் மீதே கசந்து வரும். உயிர் வாழ்வதில் அர்த்தமேயில்லை. மானம் கெட்டு வாழணுமா? மாண்டு மடியலாமே... என்று விரக்தியில் மனம் கசந்துபோய் அழுவாள் வடிவு.
இப்படிப் பல நாட்கள். பல கத்திக் குத்துகள். பல காறித்துப்பல்கள்.
‘மகன் ராமசாமிக்காக உயிர் வைத்து வாழணுமே!’ என்ற ஒற்றை இழையில்தான் அவளது பிழைப்பே தொடர்கிறது.