112
காகிதம்
வடிவு கதவில் கைவைக்க நடுங்கினாள். திறக்கப் பயந்தாள். தலைகாட்டத் தயங்கினாள். உள்ளுக்குள் மருகி மருகித் தவித்தாள்.
‘அந்தப் பாவி வந்து நிப்பானோ!’ என்ற திகில், ‘திக், திக்’ கென்று அடித்துக் கொள்கிற மனசு. பயத்தில் வியர்த்துக் கொட்டுகிறது.
‘நாயக்கரு நாற வசவு வைவாரே’ என்கிற நினைவு.
வேறு வழியில்லை. கதவைத் திறந்தாள். மெல்ல மெல்ல தலையை நீட்டினாள். தயக்கமும் நடுக்கமுமாய் அந்தச் சகுனக்காரன் வீட்டைப் பார்த்தாள். பார்வையை நிமிர்த்துவதற்குள் அவள் மனசுள் பதைப்பு. பீதியின் அலைக்கழிப்பு.
அப்பாடா!
அவன் இல்லை.
அவள் மனசே பாரமிழந்து, பஞ்சாயிற்று. சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது. மூச்சுத்திணறல் மாயமாகியிருந்தது.
அப்போதுதான்...
மண்டைக்குள் ஒரு ஞாபகம் சுரீரென்று வந்து சுட்டது. அந்தச் சகுனக்காரன் ஊருக்குப் போய் ரெண்டு நாளாயிற்று. அவன் ஊரிலேயே இல்லை. முற்றத்தில் இறங்கிய வடிவுக்குள் சாட்டையடியாய்ச் சுளீரிட்ட நினைவு.
‘ஊர்லேயே இல்லாத அற்பப் பயல் ஒருத்தனுக்காகவா... இம்புட்டு நேரமும் பயந்து செத்தோம்?’ என்று நினைத்தவுடன் மனசெல்லாம் பரவிய கசப்பு. குமட்ட-