உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

காகிதம்


‘என்ன மாதிரி வசவு வையப் போறாரோ...’ என்ற பயத்தில், ‘வெக், வெக்’ கென்று நடையை எட்டிப் போட்டாள்.

புஞ்சைக்கு வந்தாள்-

ஒரே ஆச்சரியம்.

குளிர்ந்த முகம் காட்டி, மனச் சிரிப்போடு

“இப்பத்தான் வாரீயா?” என்று கனிவாகக் கேட்கிற நாயக்கர். முகத்தில் புன்முறுவலின் ஒளிக்கீற்று. கோபமுமில்லை. நாறவசவுமில்லை.

நாலைந்து பாத்திகள் தண்ணீர் பாய்ந்து கிடக்கிறது. யாரும் இன்னும் விதை ஊன்றக் குனியவில்லை. ரெண்டு பெண்கள் பாத்தியின் ஈரச்சகதிக்குள் சும்மா நிற்கின்றனர்.

“என்ன... இன்னும் ஊன ஆரம்பிக்கலியா?” என்று கேட்டுக் கொண்டே இவள் ஈரப்பாத்திக்குள் கால் வைத்தாள். நனைந்து, குழைந்து, மண்ணே மிருதுவாகி.. பொதுக்கென்று இறங்கியது, பாதம்.

“நீ வரட்டும்னு பாத்துக்கிட்டிருந்தேன்”

“என்னத்துக்கு?”

“நீதான்-மொத வெதையை மாரி மூலையிலே ஊனி- நடுவையை ஆரம்பிச்சு வைக்கணும்”

“ஐயய்யோ...நானா?”

“ஆமா, நீதான். ராசியான பேர்க்காரி. ஒம் புருஷன் பேரு வடிவேலு. ஒம்பேரு வடிவு. ஒரு பேர்க்காரவுக. அதுவே ஒனக்கு ஒரு கைராசி–”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/127&oldid=1810915" இலிருந்து மீள்விக்கப்பட்டது