உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதிகாரி


ட்டுக்கம்பை ஊன்றிக்கொண்டு வேப்ப மரத்து நிழலில் வெக்கையாக நின்றான், சில்லாண்டி. மனசு கிடந்து கொதித்தது. பொங்கிப் பொங்கி வந்த அழுகையை ரோஷத்துடன் அடக்கிக் கொண்டான்.

“இந்தப் பய சொன்னதுக்கெல்லாம் அழுகணுமோ..? நா என்ன சின்னப் பப்பாவா?” சிடுசிடுப்பான முணுமுணுப்பு. சீறிச் சினந்த ஆங்காரத்தில் கோவிந்தனைத் திட்டினான். அனல் பறக்கும் திட்டுகள். நாற வசவுகள். கேட்டால்..நாண்டுக்கிட்டுத்தான் சாகணும்.

இவனுக்கு எதிரே விரிந்து பரந்த கரிசல் தரிசு. அருங்கோடை. ஒரு பச்சையோ பசப்போ கண்ணில் தட்டவில்லை. உலர்ந்து காய்ந்து சருகாகிப் போன கோரைப் புல், கரட்டுப் புல்லை நக்கித் திரிந்தன வெள்ளாடுகள். வெக்கரித்த வெயில். ஏக்கமும் நப்பாசையுமாய் நிமிர்ந்து நிமிர்ந்து கள்ளப் பார்வை பார்த்துக் கத்துகிற ஆடுகள், பச்சைக்கு ஏங்குகிற ஆடுகள்.

இவனது ஆங்காரத்தில் அதன் ஏக்கமான கதறல்கள் கூட எரிச்சல்படுத்துகிறது. குனிந்து கல்லை எடுத்து எறிகிறான். எறிகிற கற்கள் ‘விர்ர்ர்.. விர்ர்ர்ங்’ என்ற விசை இரைச்சலோடு பாய்கின்றன. குறிப்பாக கோவிந்தனின் ஆடுகளை நோக்கியே பாய்கிற அவனது மனக்கற்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/130&oldid=1810921" இலிருந்து மீள்விக்கப்பட்டது