மேலாண்மை பொன்னுச்சாமி
119
சில்லாண்டிக்குள் குதறப்பட்ட அவமான ரணம். ஒரு பிடிவாதத்தில் கழுத்தை அந்தப் பக்கம் திருப்பாமலிருந்தான். ஆனால்...மனசின் ஆழத்தில் ஆசை.
அந்தக் கோலாகல ஆரவாரக் கூச்சலில் தனது குரலும் கலந்து நிற்க வேண்டும் என்ற ஆசை. பொங்கல் வைப்பதை... மொட்டை போடுவதை... சந்தனம் தடவிய சின்னத் தலையைப் பார்க்க ஆசை. அந்த மகிழ்ச்சியான மனிதக் களேபரத்தில் தானும் சமதையாகக் கலந்து மகிழ்ந்து குலாவிக் கிடக்கணுமென்னும் ஆசை. வெள்ளையும் சொள்ளையுமாக கிராமத்துப் பெண்கள்... சந்தோஷமாய்ப் பேசிச் சிரித்து... மனக்கொண்டாட்டமாய்க் குதூகலிக்கிற அழகைப் பார்க்க ஆசை-
என்ன செய்ய..?
இவன் எப்ப.. எதுக்கு.. என்ன ஆசைப்பட்டாலும் நிறைவேறாது. அதோடு மட்டும் வெறுமனே போகாது. மனசின் ஆழம் வரைக்கும் ஓர் அரிவாள் வெட்டு விழும். காயமாக்கும். அவமான ரணம், சாகும்வரைக்கும் மாறாத தழும்பாகிப் போகும்.
இப்பவும். அப்படித்தான்...
நின்ற நிலையில் நிற்பது கஷ்டமாக இருக்கிறது. கால்கடுக்கிறது. தொடைச் சதையெல்லாம் உளைச்சல் எடுக்கிறது. சற்று விலகி, விலகி கள்ளத்தனமாய் நழுவ தருணம் பார்க்கும் ஆடுகளைக் கல்லால் எறிகிறான்.
“ஹைய்க்... ஹைய்க்.. ஏய் மூஞ்சி வெள்ளை, எங்க பாயப் பாக்கே?” என்று ஆடுகளின் பேர் சொல்லி அதட்டுகிறான்.