உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

129


கொண்டு... விகாரங்களால் குதறப்பட்ட மானபிமான ரணத்தோடு...ஆட்டுக்கம்பை ஊன்றிக் கொண்டு....

நீண்ட யோசனையில் நேரம் போவது தெரியாமல் மூழ்கிக் கிடந்த சில்லாண்டி.. கால் எரிச்சல் பற்றியதால்... காலைமாற்றி ஊன்றினான். தற்செயலாகக் கரிசல்தரிசைப் பார்த்தான்.

தரிசு, தரிசாகவே கிடந்தது. வெள்ளாடுகளைக் காணோம். ஓர் ஆட்டைக்கூடக் காணோம். திக்கென்றது.

விரிந்து பரந்த கரிசல் தரிசு முழுதும் பார்வையை எறிந்தான். எங்குமே சூன்யம். ஆடுகளற்ற சூன்யம்.

‘ஐயய்யோ... பணம்பெத்த ஆடாச்சே.... எங்க போச்சு...? ஏதாச்சும் வெள்ளாமை வெளச்சல்லே.... பச்சைப்பசப்புலே போய் விழுந்து மேய்ஞ்சிட்டா...? ஐயய்யோ...ஊர்க்கூட்டம்.... வசவுகள்... அபராதம்...’

சில்லாண்டி பதறிப் பதைத்தான். உள்ளங்கால்வரை பரவிப் பாய்ந்த மன அதிர்ச்சி. பயச் சிலிர்ப்பு. கையும் காலும் ஓடவில்லை.

‘முதலில் கோவிந்தனிடம் தாக்கல் சொல்லணுமே... கோயிலுக்குள்ளேயிருக்கிற கூட்டத்துக்குள்ளே இருக்கானே.... எப்படிச் சொல்ல?’ மனசுக்குள் வியர்த்துக் கொட்டியது.

ஒரே ஓட்டமாய்க் கோயிலைப் பார்த்து ஓடினான். வெறிபிடித்த ஓட்டம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய ஓட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/142&oldid=1810942" இலிருந்து மீள்விக்கப்பட்டது