2
காகிதம்
“கருசக் காட்டுலே கரைபோடணும். ஒடைப்பெடுத்து ஓடையா புடுங்கிக் கெடக்கு. அதை அடைக்கணும்.”
“அப்படியா...சாமி?” என்று தயக்கமாக இழுத்தான். சட்டென்று “வரல்லே சாமி” என்று சொல்லவில்லை. ராமலிங்கம் முகத்தில் ஒரு சின்ன மகிழ்ச்சி. காரியம் கைகூடி வருகிற திருப்தி. வேப்பம் பழத்தை விழுங்கிய மைனாவின் சந்தோஷம். முகச் சுருக்கம் மறைகிற மென்னகை. “அப்பச்சரி... நீ வேலைக்கு வாரீயா, செபாட்டி? நானும் ஊரெல்லாம் பேயாச் சுத்திட்டேன். ஒவ்வொரு பயலா தொண்ணாந்து (மிகக் கெஞ்சி) பாத்துட்டேன். எந்தப் பயலும் வரவே மாட்டேங்கான்.”
“ஆமா.... சாமி. நம்ம ஊர்லே இப்ப ரொம்ப ஆளுக்குக் கிராக்கிதான். கூலி வேலைக்கு வர்றவுக எல்லாம் கொய்யாப்பழ ஏவாரத்துக்குப் போறாக. கேரளாவுக்கு ஐஸ் விக்கப் போறாக. சம்சாரி வேலைகளுக்கு ஆளு தட்டுப்பாடாயிருச்சு.”
“......நீ சொல்றதும் சரிதான். ஒடம்பு வளைஞ்சு மம்பட்டி புடிச்சு ஒழைக்குறதுக்கு கறியெல்லாம் வலிக்குது. மேனி அலுங்காம காசு பாக்க நெனைச்சு, ஏவாரத்துக்கு போய் ஏமாத்தித் திரியுறாங்க நம்ம பயக. காட்டு வேலைக்கு ஆளு இல்லாமப் போச்சு.”
“நீங்க சாமியவுக பண்ற கொடுமையும் அப்படித் தானே இருக்கு? வேலைக்கு வர்ற கூலி சனத்தை கொன்னு புழியணும்னு குறியா நிக்கீகள்லே? மனுசனை மனுசனா மதிக்க மாட்டீகங்குறீகள்லே?”
“ஏண்டா, குடுக்குற கூலிக்கு வேலை வாங்க வேண்டாமா?”