மேலாண்மை பொன்னுச்சாமி
3
“அதுக்கும் ஒரு அளவு இல்லியா... சாமி.
“அளவு என்ன வேண்டிக்கிடக்கு மயிரளவு.”
“அதான்- ஆள்கிடைக்காம இப்படி தெருத்தெருவா அலையுறீக?”
“அந்த மயிரெல்லாம் நீ காப்பாத்த வேண்டாம், இதெதுக்கு வளவளாப் பேச்சு? நீ நாளைக்கு வாரீயா... இல்லியா? அதைச் சொல்லுடா.”
“நா வரல்லை சாமி.. டக்கருக்குப் போவணும்”
ராமலிங்கம் முகத்தில் வந்து அப்பிய ஏமாற்றம். நம்பிக்கை வெளிச்சம் இருட்டாக மாறிய வேகம். சுள்ளென்று பாய்ந்த கோபம். விறைத்துக் கடுகடுத்த அவரது முகத்தைப் பார்த்து உள்ளூர ரசித்தான்.
அவருக்குக் கண்கள் இடுங்கின.
“பெறகெதுக்கு... இம்புட்டு நேரம் பேச்சை இழுத்தே?”
“சாமியவுக்கிட்டே பேசுறதும் குத்தமாய் போச்சா?”
செபாஸ்டியன் உதட்டில் எட்டிப் பார்த்த நமுட்டுச் சிரிப்பு. ஆள் தேடி ஆவலாய் பறந்து வருகிறார் என்றறிந்து கொண்டுதான், இழுத்தடித்தான். ஆசைகாட்டி ஏமாற்றுகிற ஒரு சின்ன விளையாட்டுத்தான்.
இவனது நமுட்டுச் சிரிப்பில் ராமலிங்கம் கொதித்துப் போனார். “ஏலேய்...ஒஞ்சாதிக் குசும்பையா... காட்டுதே?”
சாதி சொல்லித் திட்டிய பின்னும் ரோஷப்படாமல் சிரிக்கிற செபாஸ்டியன். விளையாட்டை விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிற இயல்பு.