உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காகிதம்


சனிக்கிழமை கிராமத்திற்கு வருகிறேன். கிராமத்தையும், தங்களையும் பார்க்க ரொம்ப ஆசை” என்று முடித்திருந்தான், பாக்கியம்.

‘வா_ மருமகப்புள்ளே_வா.! என்னையும் ஊரையுமா பாக்க ஆசை, ஒனக்கு?” என்று குதூகலமும், குறும்புமாக நினைத்துக் கொண்டான். இடுப்பில் குடத்துடன் ஆட்டுக் குட்டியாகத் துள்ளிச் செல்லும் மகளைப் பார்த்துக் கொண்டான். அவனுக்குள் முடிச்சவிழ்ந்து வாசம் பரப்புகிற புன்னகை.

காகிதத்தை மறுபடியும் படித்தான். படிக்கப் படிக்கத் திகட்டாத காகிதம். உணர்வுகளின் சகல அணுக்களிலும் இனிமையாய் கரைகிற செய்தி. அவனது ஆயுள் கனவுக்கு கால் முளைத்துக் கம்பீரமாக நடக்கப் போகிற நம்பிக்கை. ரெக்கையடித்து ஜிவ்வென்று பறக்கிற நினைவுகள்.

பட்டணத்துலேயே படிச்சு வளர்ந்த புள்ளையாண்டான். பட்டிக்காட்டுலே புழுதியிலே வளர்ந்த நம்ம புள்ளையைக் கல்யாணம் முடிப்பானா? “சும்மாதான் வந்தேன்” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டால்_?

கல்லெறிபட்ட பறவையாக ‘சொத்’தென்று சுடுபுழுதியில் விழுகிற நினைப்பு. நெருடலான உறுத்தல். ‘பக்’கென்றாகிப் போகிற மனச் சூன்யம். அடிவயிற்றில் கலக்கம்.

“தடியால் அடித்துத் தண்ணீர் விலகுமா” என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்கிற அவன். ஆயிரந்தான் வேற்றுமையிருந்தாலும் ... அக்கா மகன் என்கிற பந்தம் அற்றுப் போகுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/19&oldid=1808854" இலிருந்து மீள்விக்கப்பட்டது