மேலாண்மை பொன்னுச்சாமி
7
அவனுக்குள் மீண்டும் கசிவெடுக்கிற ஊற்றுகள். மனசின் சகல மூலைகளிலும் பரவிப் படர்ந்து குளிரச் செய்கிற நம்பிக்கைச் சுனைகள். அருஞ்சுனைகள்,
செபாஸ்டியன் சனிக்கிழமையை வெறித்தனமாக எதிர்பார்த்தான்.
சனிக்கிழமை. டக்கருக்குப் போகவில்லை. காலையிலிருந்தே ஒரு வகையான படபடப்பு. பரபரப்பு. இன்னதென்று விளங்காத குழப்பம்.
பாக்கியம் வந்தால்... அடையாளம் தெரியுமா? பத்து வருஷமாயிற்று, திருச்சியில் அவனைப் பார்த்தது. எவ்வளவு ஞாபகப்படுத்தினாலும் பிடிபட மறுக்கிற முகம். டவுசரும் சட்டையுமாக மனசுக்குள் வந்து போகிற ஒரு சிறுவத் தோற்றம்.
ஞானத்தாயும் வேலைக்குப் போகவில்லை. வீட்டில் வளர்கிற கோழிகளில் ஒரு முட்டைக்கோழியைக் குறி வைத்திருந்தாள். மகள் தெரசம்மா தரையில் கால் பாவாமல் ஓடித் திரிந்தாள்.
செபாஸ்டியனுக்கு மதியக் கஞ்சி இறங்கவே மறுத்தது. மனத்ததும்பல்.
பாலத்தைக் கடந்து ஊருக்குள் வந்துவிட்டான், மூன்று மணி பஸ்ஸை எதிர்பார்க்க.
மாறிமாறி பீடியும் டீயுமாகப் பொழுது நகர்ந்தது. ஒரு நிலைப்படாத மனசில் அலைபாய்கிற நினைவுகள்.
எங்கோ ஓடுகிற டக்கரின் இரைச்சல். மோட்டார் பைக் சத்தம் எல்லாம் இவன் மனச்செவிக்குள் பஸ் மயக்கத்தை ஏற்படுத்தின. அடிக்கொரு தடவை பஸ் வரும் திசையைப் பார்த்துக் கொண்டான்.