மேலாண்மை பொன்னுச்சாமி
9
“ஆமா நாந்தான். விடிஞ்சதுலேயிருந்து ‘இப்ப வந்துருவே, அப்ப வந்துருவே’ன்னு காத்துக் கெடந்தேன். கண்ணு பூத்துப் போச்சு.”
செபாஸ்டியன் மனசுக்குள் திக்குமுக்காடல். மகிழ்ச்சியின் கூத்தாட்டம். தத்தளிப்பு.
ஆள் வளர்த்தியாயிருந்தான். நிழல் வாட்டத்திலேயே வளர்ந்த நிறக்கனிவு. பாலீஷான முகம். கட்டி மீசை. ‘எந்த ஜில்லா கலெக்டரோ’ என்று மலைக்க வைக்கிற கம்பீரம்.
அவனோடு சேர்ந்து சமதையாக நடப்பதில் செபாஸ்டியனுக்கு ஏகப்பட்ட பெருமிதம். விம்மிப்புடைக்கிற எண்ணத் ததும்பல். போதையேறிப்போன மாதிரியோர் மதர்ப்பு, மனசுக்குள்.
அக்காவைப் பற்றி - மாமா பற்றி - பிள்ளைகள் பற்றி - உறவுக்காரர்கள் பற்றியெல்லாம் குசலம் விசாரித்துக் கொண்டே நடக்கிற செபாஸ்டியனுக்குள், நாலா திசைகளிலும் மூர்க்கமாய்ப் பாய்கிற நினைப்புகள்.
நடை நடையாயிருக்க - பேச்சு பேச்சாக இருக்க, மனம் சுற்றுமுற்றும் பார்த்தது. தன்னை யார் யார் பார்க்கிறார்கள். ‘யார் இது புதுசா இருக்கு’ என்ற கேள்விக்குறியில் நெறிகிற கண்கள் எது எது என்று எல்லாவற்றையும் கவனித்தபோது, தாளாத பெருமிதம்.
“வீட்டுக்குப் போனால்... டீ இருக்குமா? பால் இருக்குமா? இங்கேயே டீ குடித்துவிட்டுப் போய் விட்டால்...நல்லதே.”
“அப்படியா சொல்லுறீக?”