12
காகிதம்
“சில்வர் கிளாஸ் இருக்குல்லே? டீ போடத்தானே வைச்சிருக்கீக?”
“அதுக்கில்லே.. அதுவந்து...அதாவது... கண்ணாடி கிளாஸ்தானே சுத்தம்?”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். சில்வர் கிளாஸ்லேயே நீங்க போடுங்க.”
“என்னப்பா இது. விதண்டாவாதம் பண்றே?”
“கிளாஸ்லே டீ கேக்குறது விதண்டாவாதமா?”
“நாங்க போட்டுக் குடுத்ததை குடிச்சிட்டுப் போக வேண்டியதுதானே? எல்லாரும் போகலே?”
“காசு வாங்குறீக இல்லே? நாங்க கேட்டதுலே குடுக்க வேண்டியதுதானே?”
கால முரணின் சமூகக் கைகலப்பாக அங்கு முறுக்கேறியிருந்த பிடிவாதம். சூழலையே வெக்கையாக்கி விட்ட வாய்ச்சண்டை. சுற்றி நின்றவர்களிடம் பதைப்பும் ஆத்திரமுமாய் உணர்வுகள்.
கடைக்காரருக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. ஆத்திரமும் மூர்க்கமுமாய் செபாஸ்டியனைப் பார்த்தார். பாக்கியமும் பின் வாங்குவதாக இல்லை. அவன் நின்ற வைராக்கியத் தொனியே கடைக்காரரிடம் ரொம்ப ஆத்திரத்தை மூட்டியது.
“காசு குடுத்தா... எது வேணும்னாலும் கேப்பீயா? நாங்க குடுத்துரணுமா? எங்க வீட்டுப் பொண்ணைக் கேப்பே. குடுக்கணுமா?”
“இப்ப..நீங்கதான் விதண்டாவாதம் பேசுறீக.”