மேலாண்மை பொன்னுச்சாமி
13
செபாஸ்டியனுக்குக் குலைபதறி வந்தது. விஷயம் விபரீதமாகிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான். உள்ளூர உதைப்பு. என்னென்ன நாசக்காடு வந்து சேருமோ- என்று மனசுக்குள் மருகினான். பீதியும் கிலியுமாக நடுங்கினான்.
உள்ளிருந்து ராமலிங்கம் வெறுப்பும் குமைச்சலுமாய் கத்தினார், கடைக்காரரிடம். “பொண்ணு மட்டுமா கேப்பாக? இப்ப இருக்கிற எளிய சாதிக்காரப் பயகளுக்கு தலையிலே கொம்பு முளைச்சிருக்கு. எல்லாமே கேப்பாக.”
சுற்றி நின்றவர்களும் கோபம் கோபமாகப் பாய்ந்தார்கள். குதர்க்கமாகக் கடித்துக் குதறினார்கள். பாக்கியம் அசரவில்லை.
“இப்ப... டீ தரப் போறீகளா.. இல்லியா?”
“என்னப்பா... ஊர் நெலவரம் தெரியாம... சட்டம் பேசுறே?”
“நீங்கதான் சட்ட நெலவரம் தெரியாமப் பேசுறீக, தீண்டாமை கோர்ட்டுக்கு நா இப்பப்போனா, என்னாகும் தெரியுமா? ஆறு மாசம் நீங்க “உள்ளே” போகணும். இந்த வட்டாரத்துக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர்லே கோர்ட். நா போகட்டுமா?”
“என்ன நீ? ஊர் விட்டு ஊர்வந்து, எங்களை அரட்டிப் பாக்குறீயா?”
“நீங்கதான் கால நிலவரம் தெரியாம அதிகாரம் பண்ணுறீக.”
கோர்ட் என்றவுடன் கடைக்காரர் முகத்தில் ஒரு மிரட்சி. ‘திக்’கென்று பேச்சை நிறுத்திவிட்டார்.