14
காகிதம்
ஆனால்... ராமலிங்கம் விடுவதாக இல்லை. ‘தங்கு, புங்’கென்று குதித்தார். தறியமுறிய விழுந்தார். பயங்கரமாக எகிறிக் கொண்டு பாய்ந்தார்.
“கோர்ட்டுன்னா.பயந்துருவாகன்னு நெனைச்சீயா? பெரீய்ய்ய கோர்ட். நாங்க பாக்காத கோர்ட்டா? இந்த ஊருச் சட்டத்தை மீறுன கோர்ட்டா... ஒலகத்துலேயிருக்கு?”
“பாத்துருவமா?”
“பாத்துருவம், எங்க போனாலும்... எளியவன் எளியவன்தானே? சாதி இல்லாமலா போயிரும்?”
“எளியவன்தான். அவனும் மனுசந்தானே? மனுச உரிமையைப் பறிக்கிற அதிகாரம். இப்ப எந்தக் கொம்பன் கிட்டேயும் கெடையாது, தெரியுமா?”
மாறி மாறிப் பேசி சூடேற்றிக் கொண்டிருந்த ராமலிங்கத்தையும், மற்றவர்களையும் கடைக்காரர் சமாதானம் பண்ணி அடக்கினார். அவருக்குள் கோபத்தை மீறினபயம். வம்பு வந்து சேருமோ என்கிற பதற்றம்.
“சரி சரி...... தம்பி, ஒங்களுக்கு சில்வர் கிளாஸ்லே தானே டீ வேணும்? போட்டுத்தாரேன். தங்கக் கிளாஸ்லே கேட்டாலும், தாராளமாப் போட்டுத்தாரேன், தந்து தானே ஆகணும்?”
கடைக்காரரின் அந்தப் பாவனைப் பணிவே, பெரும் சாட்டையடியாகச் சுளீரிட்டது, செபாஸ்டியனுக்கு. அடர்த்தியான கோபத்தின் கற்றைத்தாக்குதலாக இருந்தது.
“ஒங்க டீயை நீங்களே வைச்சுக்கோங்க.”