20
காகிதம்
ராஜம் போய்விட்டாள். விஜயத்துக்கு செயலற்ற நிலை. செயல்பட முடியாமல் மரத்து, மந்தித்துப் போன மனநிலை.
வெளுக்கிற வெயில். இளமதியத்தை நோக்கி முகம் வெளுத்து, நிறம் மாறுகிற வெயில். வெப்பமாகிற வெயில்.
போன வருஷம் நிகழ்ந்த புருஷனின் மரணம். கிணறு வெட்டுகிற வேலைக்குப் போயிருந்தான், வேல்ராஜ். கருங்கல் கிணறு. வேட்டு வைத்து வெடிக்கச் செய்து... சிதறும் கற்களை நொறுக்கி.. கூடையில் அள்ளி வெளி யேற்றுகிற வேலை.
ஏதோ ஒரு வேட்டு வெடித்ததில் ரொம்ப உயரத்துக்கு நாலா திசைகளிலும் சிதறித்தெறித்த கருங்கல் துண்டுகள். அதில் ஒரு துண்டு... இவன் தலையில் விழ-
ரத்த மழையில் நனைந்த பிரேதமாகத் தூக்கிக் கொண்டு வந்து போட்டனர் நாலைந்து கூலியாட்கள்.
மூன்று வயதுக் குழந்தையோடு இவள் வெடித்துக் கதறி அழுத அழுகை. தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய கதறல். அறுத்துப் போட்ட கீரைத் தண்டாக வாடிக்கிடந்த அவலக்கோலம். வாழத் தொடங்கிய பருவத்திலேயே வாழ்க்கையையும், தாலியையும் பறிகொடுத்த பரிதாபம். வாழ்க்கையாகவே வந்து அப்பிக் கொண்ட சாஸ்வதச் சூன்யம்.
ஊர்ஜனம் அவளைப் பார்த்துக் கண் கலங்கியது. பேதலித்துப் புலம்பியது. “ஐயோ, ஐயோ..” என்று கதறிப் புலம்பியது. யார் புலம்பி, என்ன செய்ய? மிச்சமிருக்கும் நாட்களை பிழைத்துத் தீர்க்கணுமே.