24
காகிதம்
விழுகிறது. கால்சதையின் மஞ்சள் ஜ்வலிப்புக்கு முன்னால் நிற்க முடியாமல், தீயின் நிறம் தோற்று முகம் மங்கியது.
அப்போதுதான் -
வேலக்கா வந்தாள். ஏதோ விஷயம் பேச வந்த வளைப் போல ‘வளா, வளா’வென்று அதை, இதைப் பேசினாள். விஜயத்துக்குள் வெறுப்பாக இருந்தது. கண்ணில்கூட மன எரிச்சல் லேசாக மின்னியது. இருந்தாலும் முகத்தாட்சண்யத்திற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்த முகம் காட்டினாள். ‘ம்’ கொட்டினாள், அரைமனசாக.
வேலக்கா ‘ஒரு மாதிரி’ என்று ஊர் முழுக்கத் தெரிந்த விஷயம். தகாத உறவுகள்-முறைகேடான சேர்க்கைகள்-கள்ளப்பறவைகள்-என்று நடக்கிற ரகசிய இழிவுகளுக்கெல்லாம் துவக்கப் புள்ளியாகத் தூதாக இருந்து, பாலமாக விளங்குபவள்.
இவள் வீட்டுப்படி ஏறி, நின்று பேசுவதையே அசூயையாக உணர்ந்தாள், விஜயம். வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் குமைந்தாள்.
அப்போதுதான் -
பேச்சோடு பேச்சாகப் பேசுவதைப் போல... ரொம்ப இயல்பாக, அந்தத் தீப்பந்தத்தை வீசினாள், வேலக்கா.
“அடிக்கடி... அந்த வேப்பமரம் பக்கமாப் போவீயோ?”
“ஆமா... கடைக்குப் போறப்ப... தண்ணிக்குப் போறப்ப அந்த வழியாப் போவேன். அதுக்கென்ன?”
“அங்க நடராசன் உக்காந்திருப்பானோ?”