உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

காகிதம்


என்னோட கெண்டைக்காலுலே ஒட்டுற புழுதிக்குச் சமானம்.த்தூ!’

நினைக்க நினைக்க அவளுக்குள் குலை கொதித்தது. மனசெல்லாம் கிடந்து கசந்தது. அவமானத்தில் கூசிப் போகிற நினைவு.

‘ச்சேய்... நம்மளை எம்புட்டு ஏளனமா... இழிவா- நெனைச்சுட்டான்! ஏழையைக் கண்டா, மோழை (கொம்பில்லா மாடு)யும் பாயுங்கிறது சரியாய்ப் போச்சே. எளியவன் பொண்டாட்டின்னா- எல்லாருக்கும் மதினி முறையா? அப்படி ஒரு சின்னப்பய நினைக்குற அளவுக்கா- நா நடந்துக்கிட்டேன்? இருக்குற லட்சணத்தைக் குலுக்கி மினுக்கிக்கிட்டா-திரிஞ்சேன்?’

வேப்ப மரப் பாதையில், தான் நடந்து போய் வந்த நினைவுச் சுவடுகள். கடைக்கு-ஓடைக்கு-தண்ணீர் எடுக்க. எல்லாம் அந்தப் பாதைதான்.

அப்போதெல்லாம்... வேப்பமரத் திண்ணையில் அந்தக் கொரங்கு உட்கார்ந்திருக்கும். பல்லையிளித்துக் கொண்டு. கண்ணில் காம எச்சில் வழிய கழுத்துக்கு மேல் ஓநாய்த் தலையோடு.. உட்கார்ந்திருக்கும். உற்று உற்றுப் பார்க்கும். கண்ணால் துரத்தும். எத்தனையோ தடவைகள் இவளது உள்ளுணர்வில் உறுத்திய பார்வைகள்.

‘இது என்னடா- இச்சிலாத்தி’ என்று மனசுக்குள் சள்ளைப்பட்டிருக்கிறாள்.

வேப்பமரப் பாதையில்லாமல் வேறு பாதையிருக்கத்தான் செய்கிறது. மேலத் தெரு வழியாகப் போகலாம். ஆனால், அங்கே ஒரு சிக்கல். இவளுக்குப் பகையான ஒரு சின்னச் சிறுக்கியின் வீடு, அந்தப் பாதையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/39&oldid=1808883" இலிருந்து மீள்விக்கப்பட்டது