உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

27


‘அந்தச் சனியன் மூஞ்சியில் முழிக்கக் கூடாதே’ என்ற வெறுப்பில்தான் வேப்ப மரப் பாதை. இங்கே. இந்த முள். இந்தச் சனியன். புதுப் பணக்காரனின் வாய்க் கொழுப்பு.

மனசுக்குள் -

அந்த ஓநாயின் மூஞ்சி. கறுத்தமூஞ்சி. மேல் உதட்டுக்கு மேல் மீசை ஓரத்தில் ஒரு மச்சம். கண்ணை உறுத்துகிற மச்சம். தொண்டையில் ஒரு கறுப்பு நரம்பு புடைத்து நெளிந்து இறங்கும். பனியன் போடாத நேரங்களில் நெஞ்சுக்குழியில் ரோம அடர்த்தி. பனியன் போட்டிருந்த தோலின் நிறமாற்ற அடையாளம்.

‘ச்சேய்... அந்த ஓநாய் மூஞ்சிக்கு இப்படி ஒரு சபலமா? எச்சில் வடிப்பா?’

இந்தக் கணத்தில்-

அவன் மனசின் ஆழத்தில் ஒரு பெருமித உணர்வு முகம் காட்டுவதை அவளே உணர்ந்து வியந்தாள்.

இப்படி ஓர் ஈனப் பார்வையை ஈர்த்துவிட்ட அழகின்-இளமையின் மீது அவளுக்கே ஒரு கர்வமா? தற்பெருமையா? அல்லது வேல்ராஜ் தந்த அஞ்சு வருஷ ருசியா? ருசி கண்ட பூனையின் கள்ளத்தனம், தன் மனசிற்குள்ளும் பம்மிக் கிடக்கிறதா? நெளிகிறதா?

நானும் எங்கோ... ஒரு மூலையில் சலனப்பட்டி ருக்கேனா? சபலப்பட்டிருக்கேனா? சதைத் திரட்சியின் மோகப் பேயின் ராட்சஸத்துக்குப் பலியாகியிருக்கேனா?

அவனது மேல் உதட்டு மச்சத்தை கண்டுணர்கிற அளவுக்கு நானும் உற்றுப் பார்த்திருக்கேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/40&oldid=1808884" இலிருந்து மீள்விக்கப்பட்டது