குருவையாவுக்கு எழுபதுக்கு மேலாகி விட்டது வயசு. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. முழங்கால் மூட்டுவாதம். நடந்தால் ஒரு தளர்ச்சி. ஒரு நிரந்தரமான வலி.
‘எல்லாம்.. முடிஞ்சு போச்சு. மயானக் கரையிலே கட்டையை சாய்ச்சிருக்கணும். சாம்பலாயிருக்கணும். ஆனா-நம்ம பாடு ஓயலியே.’
ஒரு பெருமூச்சு அவரைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டது. அடைகிற பொழுதைப் பார்த்தார். நிறம் மாறுகிற வெயில். ‘கிடைகாவலுக்குப் போவணும். விடிய விடிய செம்மறியாடுகளோடு மாரடிக்கணும்’
இந்த நினைவே அவருக்குள் சோர்வூட்டியது. வேலைப் பளுவைச் சுமக்கிற சக்தி உடம்புக்கு இல்லை. மனசின் பலத்தில்தான் வண்டி ஓடுகிறது.
“இன்னொரு டீ போடப்பா. கிடைகாவலுக்குப் போவணும்.”
வீட்டுக்குப் போனால்... கெழடி எல்லாம் ரெடி பண்ணியிருப்பாள். கம்பளி, சாக்கு, போர்வை எல்லாம் மடித்துச் சுருட்டி கட்டியிருப்பாள். அதற்குள் டார்ச்லைட்டையும் சொருகியிருப்பாள். ஆட்டுக் கம்பையும் எடுத்து வைத்திருப்பாள். கூதலுக்குக் கதகதப்பாக