உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காகிதம்


சத்தமாகவே முகம் காட்டுகிற உலகம். காதே கண்ணாகிப் போன அவலம்.

“தாத்தா...எங்கே.. கெடை காவலுக்கா?”

“ஆமய்யா. யாரது? ராசமணி மவனா?”

“ஆமா தாத்தா... கண்ணுக்கு ஆளே தெரியலியே, நமக்கு ஆடுக எப்புடி தெரியும்? விடிய விடிய அதுகளைக் கட்டிக்கிட்டு எப்படி மாரடிப்பீரு?”

“கஷ்டந்தான்...ஆனாலும் சமாளிச்சிடுவேன்.”

“எப்படி தாத்தா?”

“பத்து வயசுலே ஆட்டுக்கம்பைத் தூக்கிக்கிட்டு, ஆட்டு வாடையை ஏத்துக்கிட்டு மேய்க்க ஆரம்பிச்சவன், நா. மனுச சகவாசத்தைவிட ஆட்டுச் சகவாசம் ரொம்ப சுத்தமாய் அத்துப்படி. அதுக ரோம அசைவுலேயே ஒரசுற சலன சத்தத்துலேயே- அதுக மனசு புரிஞ்சு போகும். கள்ளத்தனம் புடிபட்டுடும். அதுக்கேத்தாப்புலே அடக்கி வச்சிரலாம்.”

“ம்” கேட்டவன் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தான்.

“குருவையாக்கோனாரு கெடைகாவல் காத்து-தப்பு வந்ததாக நீ கேள்விப்பட்டிருக்கீயா, இதுவரை? ஆடுக தப்பிப் போய் வெள்ளாமையிலே விழுந்துச்சுன்னு இதுவரைக்கும் ஒரு தாக்கலாச்சும் உண்டா?”

அவரது கேள்வியின் கம்பீரம். நிமிர் சுடராக ஒளி வீசுகிற தன்னம்பிக்கை. நரைத்த மீசையில் ஒரு நிமிர்வு. உணர்வுப் பிரகாசம்.

அந்தக் கணம்–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/47&oldid=1809327" இலிருந்து மீள்விக்கப்பட்டது