உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

காகிதம்


புருஷனுடன் வாய்ச்சண்டை. அடிதடி. அடிபட்ட கொதிப்பில் அழுது புலம்பிய மூன்றாவது மருமகள், “எல்லாம் இந்தக் கெழட்டுச் சனியன்களாலே வந்த வெனை. இதுக நம்ம காலைச்சுத்துன பாம்புகதான்.”

முற்றி உலர்ந்த கிழட்டு மனசுக்குள் விழுந்த செருப்படிகள்

ணிமுத்து புஞ்சை மிருதுவாக இருந்தது. உழுது புரட்டப்பட்டிருந்தது. ஈரல்கட்டி மாதிரி மினுமினுக்கிற மண். இதில் தான் கிடை.

செம்மறியாடுகளை துண்டம் துண்டமாய் (துண்டம்=ஏறக்குறைய நாற்பது ஆடுகள்) கொண்டு வந்து சேர்ப்பார்கள். மேய்ந்த ஆடுகள், இரவு முழுக்க அசை போடும். படுத்துக் கிடக்கும். மூத்திரம் பெய்யும். புழுக்கை போடும். இதுதான் புஞ்சைக்கு உரம்.

ராத்திரி முழுக்க விழித்திருக்கணும். ஒரு மணிக்கொரு தடவை படுத்துக் கிடக்கிற ஆடுகளை உசுப்பி, வட்டமடித்து இடம் மாற்றிப் படுக்க வைக்கணும். கள்ள ஆடுகள் சிலது தப்பிப்போய் பக்கத்து வெள்ளாமைகளை மேய்ந்து நாசமாக்கிவிடும். அப்படியாகாமல் காப்பதில் தான், கிடைகாவலின் முக்கியத்துவமே.

வெயில் காலத்தில் மட்டுமே கிடை போட முடியும். ஒரு கிடைகாவலுக்கு அறுபது ரூபாய் சம்பளம். மழை நாளில்....? குருவையா பாடு திண்டாட்டம்தான். பீடி வாங்கக் கூட துட்டு இருக்காது.

புஞ்சை மூலையில் மண்கட்டிகளைக் காலால் தள்ளினார். சாக்கை விரித்தார். படுத்துவிட்டார். நடுச்சாமம் வரை புஞ்சைக்காரன் பொறுப்பு. அப்புறம்தான் இவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/49&oldid=1809334" இலிருந்து மீள்விக்கப்பட்டது