48
காகிதம்
“ஐயையோ... ஏங்குடியே நாசமாப் போச்சே..” என்று ராஜம் வைக்கிற ஒப்பாரி. தலையில் ‘மடேர், மடேரெ’ன்று அடித்துக் கதறுகிற பரிதாபம்.
விநாயகத்துக்குள் பயப் படபடப்பு. நெஞ்சுக்கூடே வெறுங்கூடாகிப் போன மாதிரி. பகீரென்கிற சூன்யம்.
காயும் பூவுமாக நிறைமாசக் கர்ப்பிணியாகத் தளதளத்து நின்ற தன் புஞ்சையை, ஆடுகள்மேய்ந்த பிறகு- வெறும் குச்சிகளாக - எலும்புகளாக - நிற்கிற பரிதாபம். மனசுக்குள் தோன்றி மறைந்த அந்தக் காட்சியே... அவனுக்குள் தீ வைத்த மாதிரியிருந்தது.
வந்திருக்கும் நாசத்தின் கனம், அதன் பரிமாணம்.
அவன் மனசு கிடந்து துடித்தது. ஒரு வருஷ உழைப்பே நாசம். வெள்ளாமையே அழிவு.
என்ன செய்ய?
ஆட்டுக்காரனைத் தேடணும். சண்டை போடணும். பக்கத்து ஊரு டவுனுக்கு ஓடணும். போலீஸ் ஸ்டேஷன் போகணும். அததுக்கு ‘செல்வாக்கான’ ஆளைப் புடிக்கணும். பணம் புரட்டணும். வேனைப் புடிக்கணும். சேதாரத்தை போலீஸ் பார்க்க வைக்கணும்..
இப்படி நிறைய்ய்ய்ய்ய்ய ‘ணும்’கள்.
சூறாவளிக்குள் சிக்கிய துரும்பாக இவன் சுழன்று சுழன்று, புழுதி பறக்க ஓடித் தவித்தான். மறுநாளும் தவிப்போடு ஓடினான். சோகமும் துயரமுமாக வீடே இழவு விழுந்த வீடாகிப் போக... தகிப்பும் துன்பத் துடிப்புமாகத் திரிந்தான். கல்லெறிபட்ட மைனாவாக இவன் உயிர் துடிக்க ஓடித்திரியும் போது..
முத்துசாமியை நினைக்கக்கூட இயலவில்லை.