உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

49


அதே நேரத்தில்..

பதினைந்து மைல் தள்ளிய அந்தக் கிராமத்தில்...

களைகட்டிப் பரபரத்துக் கொண்டிருந்த கல்யாண முகூர்த்த நேரத்தில்...

வாசலுக்கு வந்துவந்து பார்த்தான், முத்துசாமி. உயிரையே கண்ணில் வைத்து உற்று உற்றுப் பார்த்து அவன் கண்ணே பூத்துப்போயிற்று.

சிநேகிதனைக் காணாத முகவாட்டம். அவனது வாட்டத்தில் மனம் சோர்ந்த அவனது மனைவி.

“என்னங்க..இன்னும் வரலைல்லே, உங்ககூட்டாளி?”

“வரலே..”

“என்ன காரணமாயிருக்கும்?”

“தெரியலே..”

“புது வேட்டி புதுச்சீலை எடுக்கணும்னு நெனைச்சுட்டு, எடுக்காம வுட்டுட்டீகளே.. அந்தக் கோபம்தான் காரணமாயிருக்குமோ..?”

“என்ன இழவோ தெரியலே. எம்புட்டுப் பழகி என்ன செய்ய? மனுசன் கொணத்த மனுசன் அறிய முடியலியே. எந்த நாய் வந்தாலும் வராட்டாலும் சரிதான்... நம்ம வீட்டுக்கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். போய் ஆகுற வேலையைப் பார்ப்போம்.”

அவன் குரலில் எல்லையற்ற விரக்தியும் வெறுப்பும் கொப்பளித்தது.


ஆனந்த விகடன், 27-7-1997


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/62&oldid=1809935" இலிருந்து மீள்விக்கப்பட்டது