54
காகிதம்
அப்படிப் பேசிப் பொழுதைக் கழிக்கின்றவன் தான்.. இன்றைக்கு ‘கம்ம்’மென்றிருக்கிறான். ‘உர்ர்ர்’ ரென்று கடுவன் பூனை மாதிரி சிடுசிடுப்பான பார்வை பார்க்கிறான். வம்புக்கு இழுத்து, வாய் கொடுத்தவர்களுக்குக் கூட பதில் சொல்ல மனசில்லாமல் மௌனச் சோகத்தில் புதைந்து போனான்.
பாண்டிக்குள்- வெறும் ஆவுடைச்சி. ‘பகீர், பகீர்’ என்று பற்றுகிற தீயாக அந்த முகம். அச்சமும் கிலியுமான நினைவுகள். அமங்கலமான கற்பனைகளாய் படையெடுத்து, அவன் மனசில் பீதியை உண்டாக்கின.
பயத்தில் உறைந்து போய்க் கிடந்தான்.
டீக்கடை வழக்கம்போல கலகலத்துக் கொண்டிருந்தது. இவன் மட்டும் அந்நியமாய். மௌனமாய்..
புஞ்சையில் ஒன்றும் வேலையில்லை இன்றைக்கு. இருந்தாலும் ‘சும்மாவாச்சும்’ போனான், சுற்றிப் பார்த்தான். கம்பம் பயிர் ஆள் உயரத்துக்கு வளர்ந்திருந்தது. கதிர் நிறைய தேன் நிறப் பூக்கள். இன்னும் ‘மணி’ பிடிக்கவில்லை. ரெண்டு தண்ணி பாயணும்.
கிணற்றை எட்டிப் பார்த்தான், கோடை காலத்தை கிணறு சொல்லியது. அடியில் கொஞ்சமாய் தண்ணீர்.
பார்வை ஓரிடத்திலும், மனசு வேறு இடத்திலும், நினைவுகள் தாறுமாறாக மற்றொரு இடத்திலுமாய் பாண்டியே முறுக்கேறிப் போய்க் கிடந்தான்.
ஆயாசத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.
மதியக்கஞ்சி குடித்தவுடன், ஊர் மடத்துத் திண்ணையில் துண்டை விரித்துப்படுத்து விட்டான். உண்ட மயக்கம். அசந்த உறக்கம். கோடை வெயிலுக்கும்,