VI
இந்தத் தோற்றத்திலிருக்கிற என்னை “எழுத்தாளர்” என்று கடவுளால்கூட யூகித்துவிடமுடியாது. யாரேனும் அறிந்தவர்கள், “இவருதான் எழுத்தாளர்” என்று அறிமுகம் செய்து வைத்தால்கூட, “நெசந்தானா? இவருதான் அவரா?” என்ற ஆச்சரியக் கேள்வியைத் தவிர்க்கவே முடியாது.
விழா மண்டப முகப்பில் வானதி பதிப்பகம் கடை போட்டிருந்தது. ‘ரோஷாக்னி’ என்ற தலைப்பிட்ட புத்தம்புதிய “(இலக்கியச்சிந்தனை பரிசுகள் பெற்றது)” என்ற அறிவிப்புடன் கூடிய புத்தகமும் கிடந்தது.
இலக்கியச் சிந்தனை பரிசு பெறுகிற அனைத்துச் சிறுகதைகளும் வானதி பதிப்பகம் மூலமாகத்தான் வெளியிடப்படும். இது வழக்கம்.
நான் கடை முன்னால் ஆவலும் ஆர்வமுமாய் நிற்கிறேன். கடைக்குள்ளிருந்தவர் என்னைத் தீர்க்கமாகப் பார்க்கிறார். கனிவான பார்வை. அறிமுகமற்ற என்னைப் பரிவுடன் பார்க்கிறார். பார்வையில் ஏதோ ஓர் யூகம். சற்றே திகைப்பு. உதட்டில் ஒரு சிறிய புன்னகை.
அவர் கண்ணைப் பார்க்கிறேன். கண்ணில் தெரிகிற அவரது மனம். அவரது உள்மனநேர்மையும், தொழிற் பற்றுறுதியும், நாணயமும், உயர்பண்பும், கண்ணியமும் அந்தக் கண்ணின் ஒளியில் எனக்குள் இறங்குகின்றன.
அவரது தயக்கத்தில் அவரது கண்ணியம்.
“நீங்க...நீங்க...நீங்க?”
“ஆமா. நாந்தான் எழுத்தாளர். மேலாண்மை பொன்னுச்சாமி”