உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

65


தலையும் வலி தாங்க முடியவில்லை. அதிலும் பிடறி வலி, உயிரைப் பிடுங்குகிறது.

கண்ணைத் திறக்க முடியவில்லை. மூடினால்... இமைக்குள் கலர் கலராக மிதக்கிற ரேகைகள். குறுக்கெலும்பின் வலி, உட்கார விடமாட்டேன் என்கிறது.

‘ம்ஹூம்-படுத்துரக் கூடாது...’ மனசின் வைராக்யம்.

ரெண்டு கைகளையும் பின்பக்கமாக ஊன்றி, மெல்லச் சாய்ந்து... இடுப்பாற்றிப் பார்த்தார். கால்களை விறைப்பாக நீட்டிப் பின்னிக் கொண்டார். இந்த விறைப்பான பின்னலில் உளைச்சல் மட்டுப்படுகிற மாதிரியோர் பிரமை.

‘அப்படியே... மல்லாக்கப்படு’ என்று உடம்பின் ஒவ்வொரு அணுவும் அவரைப் போட்டு பாடாய்ப் படுத்தியது. அவர் பல்லைக் கடித்துச் சமாளித்தார். இடுப்பு கடுக்கிறது. தொடையெல்லாம் உளைச்சல். நாசிக்காந்தல். அனலாய்க் கொதிக்கிற திரேகம்.

மூடிய இமைகளை மேலும் அழுத்தினார். அது கொஞ்சம் சுகமாக இருந்தது.

...வியாழக்கிழமை ராத்திரி. மூடைகளை வரிசைப் படுத்தி, அடுக்க வேண்டிய முறைப்படி அடுக்கி.. பாரக்கயிறைப் போட்டு இறுக்கி (சக வண்டிக்காரரின் உதவியுடன்), அரிக்கேன் லைட்டைப் பொருத்தி அடியில் கட்டி மாட்டை வண்டியில் பூட்டுகிற போது... மணி பத்து. சந்தைக் கூட்டம். ரோட்டில் விலக இடமில்லை.

சமுசிகாபுரம் தாண்டி- சத்திரப்பட்டி வருவதற்குள் வண்டிச் சட்டத்தில் படுத்து ஒரு உறக்கம் போட்டு விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/78&oldid=1810260" இலிருந்து மீள்விக்கப்பட்டது