74
காகிதம்
இழுக்க... வெள்ளி மூக்குத்திகளை அள்ளிச் சிதறுன மாதிரி சின்னச் சின்னப் பூக்களும் சிரிப்பாய் சிரிக்கிற அழகும்..
தலைப் பிரசவத்துக்குக் காத்திருக்கிற நிறைமாசக் கர்ப்பிணி மாதிரி என்ன அழகா.. மினுமினுப்பா. என்னமாய் ஜொலிச்சி நிக்குது...
பார்க்கப் பார்க்க முச்சாமி மனசுக்குள் பரவசமானார். சந்தோஷ எண்ணங்கள் சங்கீதமாய் எழும்பி, பரவி, மனசெல்லாம் நிறைந்தன.
முறுசெல் (முறைசால்) வாய்க்காலில் நடந்தார். இருபுறமும் கடலாய் விரிந்திருந்த பசுமைச் செழிப்பை மாறி மாறிப் பார்த்தார். காய்களின் மினுமினுப்பையும், நடுநடுவே தீச்சுடராய்க் கிடந்த பழங்களையும் பார்த்தார்.
சூரியன் சந்தன வண்ணத்தில் தகதகத்தது. அள்ளிச் சொறிந்த வெளிச்சத்தில், கொடிய பனிகூட, இதமான சுகமாக மாறியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் ஒளிர்ந்தும், சில இடங்களில் நிழலுமாகத் தோற்றமளித்தன.
சூரிய வெளிச்சத்தில் உலகமே ஜோதிமயமாக மாறிவிட்டாற் போலிருந்தது, அவரது நெஞ்சுக்கு.
மிளகாய்ச் செடிகளின் செழித்த விளைச்சலின் அழகு, அவருள் உற்சாக ராகத்தை இசைத்தது.
‘இந்த ரெண்டு குறுக்கத்துலே (2 ஏக்கர்) 18 குவுண்டால் வருமா’ என்ற யோசித்தார்...
‘ஊம். வரும். வரத்தான் செய்யும்’ என்று மனசுக்குள் யூகத்தை முடித்துக் கொண்டார்.