VIII
வானதி பதிப்பகம் வெளியிட்ட எனது முதல் தொகுப்பான “மனப்பூ” அந்த ஆண்டில் தமிழக அரசின் மாநில இலக்கிய விருதைப் பெற்றது. இரண்டாவதாக நான் அனுப்பிய மேட்டரை “ஒரு மாலை பூத்துவரும்” என்ற தலைப்பில் தொகுப்பை வெளியிட்டார்கள்.
அந்த நூலுக்கும் அந்த ஆண்டில் தமிழக அரசின் மாநில இலக்கிய விருது கிடைத்தது இனிய ஆச்சரியமாக இருந்தது.
முதல்வருடன் பேராசிரியர் அன்பழகன் கையில் விருது பெறுகிற நான், மறுவருடம் மாற்றுமுதல்வர் பன்னீர் செல்வம் கையில் பெறுகிறேன். அடுத்தடுத்து மாநில விருதுகள்.
அப்புறம்தான்... வானதி பதிப்பக உரிமையாளர் திருமிகு. திருநாவுக்கரசு ஐயா அவர்களைச் சந்தித்துப் பேசினேன். ஆச்சரியமான சாதனையாளர், ‘வெற்றிப் படிகளி’ல் ஏறியவர். ‘வெற்றிப்படிகளை’ப்படைத்தவர். புகழ்மிகு மனிதர்களின் மரியாதையைப் பெற்ற மாண்பு மிக்கவர், ஐயா.
அவரிடம் தன்னடக்கம், அன்பு போன்ற உயர்பண்புகள் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.
அரசு அலுவலர், ஆசிரியர் என்று ஏதேனும் ஒரு மாதச் சம்பளத்துடன்தான் எல்லா எழுத்தாளர்களும் பதிப்பகத்துடன் உறவு கொள்கின்றனர். எந்த மாத வருமானமுமில்லாமல், கிராமத்து எளிய விவசாயக் குடும்பமாக இருக்கிற எனது வறிய நிலையில் எழுத்தாளனாக நீடிப்பது ரொம்பவும் கஷ்டம். அதிலும், கமர்ஷியல் ரைட்டராக மலினப்படாமல், கண்ணியமான