உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

காகிதம்


கால்மாத்துமாய் வாங்கிய ‘அல்லுச் சில்லு’ கடன் வேறு!

இம்புட்டுக் கடன் எப்படித்தான் வந்து சேர்ந்துச்சு? வருஷத்துக்கு வருஷம் வெளச்சல் கூடித்தான் விளையுது. ஆனாலும் கடன் ஏறிக்கிட்டே போகுது. எப்படித்தான் இந்த மாயம் நடக்குதோ!

இம்புட்டுக் கடனையும் எப்படி கட்டி முடிக்கப் போறோம்?

நினைத்தாலே முச்சாமிக்கு மலைப்பாக இருந்தது. நடுவெள்ளத்தில் சிக்கிச் சோர்ந்து போனவனைப்போல மிரட்சியில் தவித்தார்.

நேற்றிரவு ‘உழவர் உலகம்’ முடிவதற்கு முன்பாக மார்க்கெட் நிலவரத்தில்...‘மிளகாய் வற்றல் சன்ன ரகம் ரூ. 1600 முதல் 1700 வரை’...என்று டிரான்சிஸ்டர் முழங்கிய அறிவிப்பு நினைவுக்கு வந்தது. மனசுக்குள் குளிர்ந்த நீர் ஓடியது. சற்றுத் தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டது.

வற்றல் களத்துக்கு வரும்போது விலை குறையத்தான் செய்யும். 1600 விக்கிற விலை குறைஞ்சாலும் 1200-க்கும் கீழேயா போயிடப் போகுது? அந்த விலை வித்தாலும் போதும்... எப்படியும் கடன் சுமையிலே பாதிக்கு மேலே இறக்கிடலாம்!

நினைத்துப் பார்க்கிறபோது மனம் இப்போது சுமை குறைந்து இலேசாகியிருந்தது.

கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நெஞ்சில் புதிது புதிதாகப் பூத்துச் சொரிய, திகிலை மென்று விழுங்கிக் கொண்டே நாட்கள் மெதுவாக நகர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/95&oldid=1810292" இலிருந்து மீள்விக்கப்பட்டது