உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

85


அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் கூதலுக்குத் தலைத் துண்டைப் போர்த்திக்கொண்டு நோக்கின்றி அலைந்தனர். முச்சாமி கவலையுடனும், திகிலுடனும் திரிந்தார். திரும்பத் திரும்ப தனது வற்றல் மூடைகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். வற்றலை அள்ளிப் பார்த்துக்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் கிடக்கும் பிள்ளையைப் பார்க்கிற தந்தையைப் போல ‘என்னாகுமோ’ என்கிற திகிலும் வருத்தமும், முச்சாமி மனசை அலைக்கழித்தன.

கமிஷன் மண்டியில் பரபரப்புடன் அலைந்தனர். வேலையாட்கள் ஓடிச் சாடினர்.வியாபாரிகள் வெள்ளையும் சொள்ளையுமாக வட்டமாக உட்கார்ந்திருந்தனர்.

மூடையிலிருந்து ஒரு சௌகில் நாலு கை வற்றலை அள்ளிப்போட்டு கடைப்பையன்கள் அந்த ‘வட்டத்’திற்குள் வைக்கின்றனர்.

ஒவ்வொரு ‘வெள்ளை’யும் வற்றலை அள்ளி நசுக்கிப் பார்க்கிறது. மடித்துப் போட்ட துண்டுக்குள் கை கொடுக்கின்றனர்.

விரல்களுக்குள்ளே விலைகள் நிர்ணயமாகின்றன.

வற்றல்காரனின் பெயருடன் ‘தீர்ந்த’ விலை அறிவிக்கப்படுகிறது.

முச்சாமிக்கு திகில் நெஞ்சைப் பிடித்துக் குலுக்க.. விதம் விதமான நினைவுகள் உள்ளுக்குள் ஓடிச் சாட - பதைப்போடு காத்திருந்தார்.

வட்டமிட்டு உட்கார்ந்திருக்கும் அந்த வெள்ளை வேங்கைகளைப் பார்க்க அவருக்குப் பயமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/98&oldid=1810300" இலிருந்து மீள்விக்கப்பட்டது