பக்கம்:காகித உறவு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

காகித உறவு


பெஸண்ட் நகரில் குவார்ட்டர்ஸ்ல இருக்கிறேன். வசதியா இருக்கும். வந்துடுங்க', என்று சொல்லிவிட்டுப் போய், பிறகு பதிலே போடவில்லை. என்றாலும், ஆதரவற்ற அனாதைகளான நாங்கள், உனக்குக் கடிதமெழுத நேரமிருந்திருக்காது என்று எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொண்டு உன் வீட்டிற்கு வந்தோம்.

வாசலுக்கு வந்த அண்ணி, வாங்களென்று கூப்பிடாமலே அறைக்குப் போய்விட்டாள். ஒடிவந்த பிள்ளைகளையும் அடித்தாள். இருந்தாலும் நாங்கள் செஞ்சோற்றுக் கடன் கழித்தோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். மாதம் இருபது ரூபாய்க்கு அமர்த்தியிருந்த வேலைக்காரியை நீக்கச் சொல்லிவிட்டு, அம்மாவே வீட்டு வேலைகளைச் செய்தாள். வேலைக்காரிக்குக் கொடுத்த பழையதைச் சாப்பிட்டாள். மாதம் இருபது ரூபாய்க்கு பிள்ளைகளை கான்வென்ட்களுக்கு இட்டுச் சென்ற ஆயாவிற்கு, நான் மாற்று ஆயாவானேன். தங்கை கல்யாணி துணிமணிகளைத் துவைப்பதிலிருந்து கடை கண்ணிகள் வரை போய்க் கொண்டிருந்தாள். நீ அலுவலகம் போனதும் அறைக்குள் போகும் அண்ணி, மத்தியானம் சாப்பிடமட்டும் ஹாலுக்குள் வருவாள். சாப்பாடு மோசம் என்று பாதியில் வைத்துவிட்டு, கல்யாணியைப் பழம் வாங்கிகொண்டு வரச் சொல்வாள். ஜாடைமாடையாகத் திட்டுவாள். சுயமரியாதைக் காரியான அம்மா, எங்களின் எதிர்காலத்திற்காகவும், உன் மனம் நோகக்கூடாது என்பதற்காகவும் பொறுத்துக் கொண்டாள். அண்ணி, 'எங்க பப்பிக்கு வாரவன் கலெக்டரா இருப்பான். இல்லன்னா சயன்டிஸ்டா இருப்பான்', என்று வயதுக்குவராத பெண்னைப் பற்றிக் கனவு காணும்போது, கனவுகள் நனவாகாமல் நசித்துப் போயிருந்த வயதுக்கு வந்த நாங்கள், கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்மைதான். அம்மாவிடம் இதை இலைமறைவு காய்மறைவாகக் காட்டும்போது, அவள் எங்களை ஏசிய ஏச்சை இங்கே எழுத முடியாது.

பெஸண்ட நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலை அதிகாலையில் ஒன்பது தடவை சுற்றினால், கல்யாணம் கூடும் என்று அம்மாவிடம் ஒரு மாமி கூறியதை ஒட்டுக் கேட்ட நான், மறுநாளிலிருந்து பிள்ளையாரைச் சுற்றினேன். அதற்கு ஏற்றாற்போல், ஒரு வரன்வந்தது உனக்கு ஞாபகம் இருக்கும். வெள்ளிக்கிழமை நல்ல நாள். நிறைந்த பெளர்ணமி நாள். ஞாபகம் இருக்கா அண்ணா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/10&oldid=1383590" இலிருந்து மீள்விக்கப்பட்டது