பக்கம்:காகித உறவு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குடிக்காத போதை



கூடாதுதான். காளிமுத்து யோசித்தான். இவனை இந்தக் கிறுக்குப் பயல் மூர்த்தியை, மாறுகால், மாறுகை வாங்கினால் என்ன?

வாங்க முடியாது. ஏனென்றால், மூர்த்தி வசதியானவன். பங்காளி பலங் கொண்டவன். பெரும்பாலும் குடியர்களாக இருந்தாலும், அவனைத் திட்டினாலே பொறுத்துக் கொள்ளாத ஊரார்கள், தீர்த்துக் கட்டினால் விடுவார்களா. மாட்டார்கள். ஊரில் முக்கால் வாசிப்பேர் எதிரியாவார்கள்? சமயத்தை எதிர் நோக்கி நிற்கும் மாவட்ட காய்ச்சும் அதிகாரி, இவனைக் கொக்குபோல் கொத்தி விடுவார். 'தொழில்' லாபத்தால், மோட்டார் பைக்கிலிருந்து மோட்டார் கார் வாங்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், இந்தப் பயலை எப்படி மடக்கலாம் என்று காளிமுத்து தீவிரமாகச் சிந்திக்கலானான். ஒசிக் குடிக்கு யோசனை கூறும் சிலர் ஒன்று கூடினார்கள். ஒரு பெரிய வியூகம் வகுக்கப்பட்டது. மூர்த்திப்பயல் எப்படியும் விழுந்துதான் ஆகவேண்டும்! தனக்கு எல்லா வகையிலும் பரிச்சயமான ஓர் இளம் பெண்ணை, மூர்த்திமேல் ஏவினான். இவள் சிரித்துப் பார்த்தாள், கைகளை ஆட்டிப் பார்த்தாள். வாய் வலித்ததும், கை ஒய்ந்ததும்தான் மிச்சம். இது போதாதென்று காளிமுத்து தன் ஒரே பெண்ணான மங்காத்தாவை நகை நட்டோடு, கட்டிக் கொடுப்பதாக, மூர்த்தியின் அப்பாவுக்கு முறைப் படி சொல்லியனுப்பினான். அப்பாக்காரர் சம்மதித்தார். ஆனால் மகன்காரன், "மங்காத்தா. தங்காத்தா தாராளமாய்க் கட்டிக்கிறேன். அதுக்கு முன்னால்... அவளுக்கும் குடிப்பழக்கம் உண்டான்னு தெரிஞ்சாகணும்' என்று சென்னான். இதைக் கேள்விப்பட்ட, ஏற்கெனவே இன்னொருவனைக் காதலிக்கும் மங்காத்தா இதைச் சாக்காக வைத்து, குடிகார அப்பனுக்கு... பிறந்ததுனால... என்னையும். குடிகாரின்னு, மூர்த்தி தடியன் சொல்லிட்டான். எல்லாம் ஒங்களால.. ஒங்களால...! கட்டுனால் ராமதுரை மச்சானைத்தான் கட்டுவேன். ஆம். ஆமாம் கட்டுவேன்!" என்று காளிமுத்து வெட்டிய திட்டக்கிணற்றுக்குள், ராமதுரை என்கிற பூதத்தைக் கிளப்பி விட்டாள். எல்லா விதத்திலும் தன்னைப் போல் விளங்கும் ராமதுரைக்கு மகளைக் கொடுக்க முடியாமல், காளிமுத்து 'மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/16&oldid=1383404" இலிருந்து மீள்விக்கப்பட்டது