பக்கம்:காகித உறவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசைக்க முடியாது

பாங்க் மானேஜர் நீட்டிய கவரை, பெருமாள்சாமி ஆவலோடு பிரித்தார். அங்கே பணத்திற்குப் பதிலாக டைப் அடித்த காகிதம் இருந்தது.

“பணம் இல்லீங்களா?”

மானேஜர் அவரை மெளனமாகப் பார்த்தார். பிறகு, “உமக்கு எதுக்குக் கடன்?” என்றார்.

பெருமாள்சாமி சளைக்கவில்லை. “விவசாயத்தை விருத்திசெய்து, உணவு உற்பத்தியைப் பெருக்கி, நாட்டுக்குச் சேவை செய்யணுங்கற நல்லெண்ணம் தான் காரணம்.”

“அப்படின்னா சரி... இந்தப் பத்திரத்தைத் தயாராய் வைத்திரும். நாளைக்கு சப்-மானேஜரும், ஒரு வெட்னரி டாக்டரும் வருவாங்க... இதை அவங்ககிட்ட காட்டும்.”

“காட்டினதும் பணம் கொடுப்பார்களா?”

“கையில ரூபாயை கொடுத்தால், தரகர்கள் மோசடி பண்ணிடுவாங்க... அதனால். சப்-மானேஜரு சந்தைக்கு வந்து, மாடு வாங்கித் தருவாரு...”

“சப்-மானேஜருக்கு, மனுஷாள் விவகாரந்தான் தெரியும். மாட்டு விவகாரம் எப்படித் தெரியும்.”

“அதுக்காகத்தான் வெட்னரி டாக்டரையும் அனுப்பி வைக்கிறேன். அவர் அங்கீகாரம் பண்ணுவார்.”

“அப்படின்னா. கையிலே நோட்டைத் தள்ள மாட்டீங்களா?”

“உமக்கு. மாடுதானே தேவ?... வாங்கித்தாறோம்.”

“மேலத்தெரு சோணாச்சலம். அவரேதான் டிராக்டர் வாங்கினாரு...”

“டிராக்டர் கம்பெனிக்கு நாங்க தான் லெட்டர் கொடுத்திருந்தோம். பணம் கட்டினோம்.”

“அப்படிங்களா... போகட்டும் போகட்டும்... அவரு விவசாயத்துக்கு உபயோகிக்கறதா, சலுகையில் டிராக்டரை வாங்கி, லோடு அடிச்சாரே. அதுக்கு என்ன பண்ணுனிங்க?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/20&oldid=1384248" இலிருந்து மீள்விக்கப்பட்டது