பக்கம்:காகித உறவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

19


“அது எங்க பாங்க் வேலையில்லை”

“போகட்டும்... விவசாயத்துக்குன்னு சொல்லி, குறைஞ்ச விலையில் வாங்கின டிராக்டரை... ஆந்திராக்காரர்களுக்கு மூவாயிரம் லாபத்துல வித்துட்டாரு.. லாப பணத்தை வட்டிக்கு விட்டு அதையே உங்களுக்குக் கட்டுறாரு... இதை விசாரிச்சிங்களா?”

“அவரு வித்தாரோ விக்கலியோ... எனக்குத் தெரியாது. மாசா மாசம் பணம் வந்துடுது.. அதுபோதும் எங்களுக்கு.”

“அதத்தான் நானும் சொல்கிறேன். பணத்தை என் கிட்ட கொடுத்திடுங்க. நான் மாசாமாசம் திருப்பிக் கட்டுகிறேன். கட்டாட்டா, ஏன்னு கேளுங்க...”

மானேஜர் பொறுமை இழந்தார். ஒரு கடனளிப்பு விழாவில் ஒழுங்காய் மனப்பாடம் செய்து பேசியதை, இப்போது ஒப்பித்தார்

பெரியவரே... நான் சொல்றதக் கேளும். அப்பாவி விவசாயிகள், அல்லும் பகலும் பாடுபட்டாலும்... உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், இருக்க இடமில்லாமல், தவிக்கிறார்கள். ஏன் அப்படி? அவர்களிடம் நல்ல மாடுகள் இல்லை. தரமான விதைகள் இல்லை. லேவாதேவிகாரரிடம் கடன் வாங்கி, மாடு வாங்குகிறார்கள். சந்தையில் மாட்டுத் தரகர்கள் கள்ளங்கபடமில்லாத இவர்களை ஏமாற்றி, மலையாளச் சந்தையில் கசாப்புக்கு போகும் மாடுகளை விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் வழியிலேயே படுத்து விடுகின்றன. பிறகு கொஞ்ச நாளில் உழைப்பின் சுமையைத் தாங்க முடியாமல் மரித்து விடுகின்றன. மாடு இறந்த கவலையில், அப்பாவி விவசாயி, தவியாய்த் தவித்து, புலம்பி அல்லலுற்று, துயரில் மூழ்கியிருக்கும் போது, வட்டிக்கு கடன் கொடுத்த "வன் நெஞ்சாளர்" வாட்டுகிறார். இருக்கிற நிலத்தையும் ஈட்டிக்காரனிலும் கொடுமையான உள்ளுர் லேவாதேவிக்காரருக்குக் கொடுத்து விட்டு, ஏழை உழவு மகன் இதயம் வேகக் கலங்குகிறான். ஏன் இந்த நிலைமை? அறியாமை, அதிக வட்டி இந்த இன்னல்களை அகற்றுவதற்காகத்தான் எமது பாங்க் முன் வந்துள்ளது. லேவாதேவிக்காரரிடம் போகாமல் இருக்க எங்கள் பணம்; தரகர்களிடம் ஏமாந்து போகாமல் இருக்க வெட்னரி டாக்டர்; மாடு இறந்தாலும், உழவர் நஷ்டப்படாமல் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/21&oldid=1383280" இலிருந்து மீள்விக்கப்பட்டது