பக்கம்:காகித உறவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

21


“என்ன அப்படிச் சொல்லிட்டிங்க... மாடு யாரு? லட்சுமி. பார்த்துத்தான் வாங்கணும். போன மாசம், எங்க பெரிய மயினி மவன்... மயிலக்காளைய வாங்கி... பார வண்டியை ஒட்டினான். லாரியில் அடிபட்டு. துள்ளத் துடிக்கப் போயிட்டான்.”

வேறு வழியில்லாமல், வேறு ஜோடிகளைப் பார்த்தார்கள். ஒரு வழியாக, ஒரு ஜோடி மாடுகளை நிச்சயித்தார்கள். விலையும் சகாயம். வாங்கிட வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டே பெருமாள்சாமி மாட்டுக்காரரிடம் “இதுல, எது இடத்தை. எது வலத்தை” என்றார்.

“ரெண்டுமே வலத்தைதான்” என்றார் மாட்டுக்காரர். அவர் மாட்டின் சொந்தக்காரர் அல்ல. அவரிடம் மாட்டிக் கொண்ட வேலைக்காரர்.

“அய்யய்ய... ஏய்யா... ரெண்டு வலத்தையும் மாட்டி ஜோடி சேர்க்கலாமா?” என்றார் பெருமாள்சாமி.

“வலத்தை இடத்தைன்னா என்ன?” என்றார் வெட்னரி.

“இதுகூடத் தெரியாதுங்களா? மாடுங்கள வண்டியிலேயாவது உழவிலேயாவது பூட்டும்போது ஸ்டிராங்கா இருக்கிற மாட்டை... இடது பக்கமா பூட்டணும். இல்லன்னா. முக்கு முடங்கலே திரும்ப முடியாது.”

“அதாவது கிரெடிட் சைட் இடது பக்கமும், டெபிட் சைட் வலது பக்கமும் எழுதுற மாதிரி” என்றார் சப்-மானேஜர், வெட்னரியைப் பார்த்து.

வேறு வழியின்றி, அந்த மூவரும் வேறு ஜோடிகளைப் பார்ப்பதற்காக நடந்தார்கள். கத்தரி வெயில் வேர்வை ஆறாக ஒடியது. கடைசியாக ஒரு ஜோடியைப் பார்த்துட்டு “இதை நீர் வாங்கித்தான் ஆகணும்” என்றார் வெட்னரியார்.

“இந்த ஜோடில... இந்த செவலக் காளை கருமயிலயை விட ரெண்டு விரக்கட குள்ளம்... ஜோடி மாட்ல.... ஏதாவது ஒண்ணு ஒரு விரக்கடதான் குள்ளமா இருக்கலாம்... ரெண்டு விரக்கட... கூடவே கூடாது.”

அந்த இருவராலும், பெருமாள்சாமியை விட முடியவில்லை. பல்வேறு மாடுகளைப் பார்த்துக் கொண்டே நடந்தார்கள். சில மாடுகளோ அவர்களைப் பார்த்து வைக்கோலைத் தின்னாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/23&oldid=1383288" இலிருந்து மீள்விக்கப்பட்டது