பக்கம்:காகித உறவு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகப் புயலில் ஒரு காதல் கூடு


குப்பமும், கூடவே மாளிகைகளும் பரவிக் கிடந்த சென்னை நகரில் ஒரு கடலோரப் பகுதி.

கடல் மண்ணின் மினுக்கத்தைப் போல் பெண்களும், அந்தக் கடல் மண்ணின் நெருக்கத்தைப் போல ஆண்களுமாக, புதிதாகப் பிரதிஷ்டை செய்திருந்த காவல் கன்னியம்மனின் கோவிலுக்கு முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலுமாய்ப் பரவியிருந்தனர்.

கண்கொள்ளாக் கடலின் அலையோசை, கண் நிறைந்த பொய்க்கால் குதிரையாட்டத்தாலும், விசைப்படகு முதலாளிகள் அமர்த்திய கல்யாணி ராக மேளத்தாலும், கட்டுமரக்காரர்கள் அமர்த்தி இழு வோசை மேளத்தாலும், கோவில் குலுங்கிக் கொண்டிருந்தது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஒருவரை ஒருவர் அடித்துத் தாக்கிக் கொண்ட இவர்களா இப்படி என்னும்படி அத்தனை மீனவரும் கடந்ததை மறந்து, நடப்பதை நினைத்துக் களித்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும் விசைப்படகு முதலாளிகள் கெழுத்தி மீன் போலவும், கட்டுமரக்காரர்கள் காஞ்சான் மீன் போலவும் கெழுத்தி கெழுத்தியோடும், காஞ்சான் காஞ்சானோடும் சேர்த்திருப்பதுபோல் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்தும், அதே சமயம் கும்பலாகப் பிரிந்தும் தோன்றினார்கள்.

கோவில் சந்நிதிக்கு முன்னால் போடப்பட்டிருந்த வி.ஐ.பி நாற்காலிகளில், விசைப் படகுக்காரர்களின் பெரியதனக்காரர் முனுசாமி மீசையை முறுக்கிக் கொண்டும், அவருக்கு அருகே அமர்ந்திருந்த அந்தக் குப்பத்தின் பெரியதனக்கார இளைஞன் கண்ணன், தன் நொண்டிக்காலைச் சுருதி சேர்ப்பது போல் தட்டிக்கொண்டும், தடவி விட்டுக் கொண்டும் இருந்தபோது விசைப் படகுபோல், வேக வேகமாகக் கண்கள் சுழல, கட்டுமரம் போல் கால்கள், மரத்துப் போய் நடக்க, நாலடி நீளமுள்ள ‘மாவலரசி’ என்னும் மீனை அமுக்க முடியாமல் அமுக்கி வைத்திருக்கும் நைலான் வலைபோல் கொண்டையை அடக்க முடியாமல் அடக்கிய வலை ஜொலிக்கும்படி மல்லிகைப்‘’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/25&oldid=1384250" இலிருந்து மீள்விக்கப்பட்டது