பக்கம்:காகித உறவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சமூக புயலில் ஒரு காதல் கூடு


பூ பந்தலிட, விறால் மீனின் வாளிப்போடு, கெண்டை மீன் கண்களோடு ஒரு வாலிபனுடன் ஜதையாக வந்தாள் முனுசாமியின் மகள் மச்சகாந்தி.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த முனுசாமி எழுந்து உட்காரு ‘மாப்பிள்ளை’ என்று சொல்லிக் கொண்டே, சரியாக இடத்தை காலி செய்யு முன்னாலேயே, மாப்பிள்ளைக்காரன் உட்கார்ந்தான். மச்சகாந்தி எங்கே உட்கார்வது என்று யோசிப்பதுபோல் கைகளை நெறித்து, கண்களைக் குலுக்கியபோது, “இதுல... குந்து ம்ச்சுகாந்தி...” என்று சொல்லிக் கொண்டே, கண்ணன் நாற்காலி முனையில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலை எடுத்துக் கொண்டே எழுந்தான். பின்னர் பழைய கதையை நினைத்து, அவள் பெயரை உரிமையோடு அழைத்ததை, அப்பாக்காரனும், இப்போது அவளை உரிமையாள்பவனும் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற எண்னத்தில், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், வேகமாக நகரப்போனான் ஒற்றைக் காலாலும், ஊன்றுகோலாலும் நகர முடியாமல் அவன் தவித்தபோது, எங்கிருந்தோ வந்த ஒர் இளம் பெண், ஒடோடிவந்து அவனை அனைத்துப் பிடித்துக் கொண்டு, “நீ... ஏன் எழுந்தே” என்று கடுமையாகச் சொல்லி, அந்தக் கடுமை படர்ந்த கண்களால், மச்சகாந்தியை உஷ்ணத்தோடு பார்த்தாள். மச்சகாந்திக்குச் சுருக்கென்றது. கண்ணில் சுரந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் தான் அமர்ந்திருக்கிறோம் என்ற ஏதோ ஒர் இன்ப துன்ப எல்லைப் பரப்பை ஊருடுவிய உணர்வு உந்த, தான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியையும், எதிரே ஒரு திட்டுச்சுவரில் உட்கார்ந்திருந்த கண்ணனையும் மச்சகாந்தி மாறி மாறிப் பார்த்தாள்.

இதைப் போன்ற ஒரு நாற்காலிதான், அவள் காதல் வயப்படவும் காரணமாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால்-

ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஒருவிசைப்படகைச் சொந்தமாகவும், சினிமா நடிகைகளும் ஓர் ஆலை முதலாளியும் வாங்கிப் போட்டிருந்த மூன்று விசைப் படகுகளை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவள் தந்தை முனுசாமி கடலாட்சி செய்த சமயத்தில், விசைப் படகு ஒட்டத் தெரிந்த கட்டுமஸ்தான கண்ணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/26&oldid=1383300" இலிருந்து மீள்விக்கப்பட்டது