பக்கம்:காகித உறவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சமூக புயலில் ஒரு காதல் கூடு


வாயிலும் சுமந்துகொண்டு வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்தால்தான் காப்பி”, என்றாள். இருவரும் தங்களை அறியாமலே சிரித்தார்கள். தங்களை மறந்து ஏதேதோ அளவளாவினார்கள்.

ழைய நினைவுகளை, அசை போட்டுக் கொண்டும், நீர் முட்டும் கண்களுடன் நிலைகுலைந்தும் நிமிர்ந்து பார்த்தாள் மச்சகாந்தி, அவளையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றிய கண்ணன், அவள் பார்வையின் வெப்ப தாகத்தில் உருகிப் போனவன் போல், எங்கேயோ பார்த்தான்.

கூத்தை நடத்தப் போகும் கோவிந்தன், சபையோருக்கு, சகலவித வணக்கங்களையும் தெரிவித்துவிட்டு, சப்ஜெக்டுக்கு வந்தான்.

“சபையோர்களே... இந்த காவல் கன்னியம்மன், நூறாண்டுகளுக்கு முன்னர், மதுரையம்பதிக்கு அருகே ஜனித்தவள். இவள், நம் ஜாதியான மீனவ ஜாதியைச் சேர்ந்தவள் அல்ல, அல்ல, அல்ல; ஆயினும் வலைபோட்டு மீன்பிடிக்கும் பாவாடராயனை, தன் அழகிய கண்வலையிலே பிடித்தவள். உள்ளூர் உறவினரைத் துறந்து, கடலோரத்திலேயே, காதலுக்காகத் தங்கியவள். கடலில், வலம்புரிச் சங்கெடுத்தான் பாவாடராயன். நம் முன்னோர் வழக்கப்படி வலம்புரிச் சங்கெடுத்தால், கடல் மாது மூன்று நாள் தீட்டுப்பட்டவள் ஆவாள். அப்போது, மீனவர்கள், கடலுக்குப் போகலாகாது. ஆனால் ஒடுறபாம்பைப் பிடிக்கிற வாலிபனான பாவாடராயன், காதலியாள் அறிவுரையை மீறி, கடலுக்குள் போய், சுறாமீன்களால் சுக்குநூறானவன். இதனால் மயங்கி, தயங்கி, மனக் கிலேசப்பட்ட காதலியானவள், தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். பின்னர், மனைவி மக்களைக் காக்கும் காவல் அம்மனாக இருப்பேன் என்று ஒருத்தி மேல் ஆவேசமாகி அறிவித்தாள். அந்தத் தர்மபத்தினி, ஒரு மீனவக்கண்ணகி. ஆகையால் பெரியோர்களே, கன்னிமை கழியா அந்தக் காவல் அம்மனின் கதையை... அடியேன்...”

கண்ணன் அவஸ்தை தாங்க முடியாதவன்போல் எழுந்தான். கடலை நோக்கி நொண்டிக் கொண்டே நடந்தான்.“”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/28&oldid=1383308" இலிருந்து மீள்விக்கப்பட்டது