பக்கம்:காகித உறவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

27


சினிமாத் தியேட்டர்களிலும் விசைப்படகுகளுக்குள்ளேயும், உலர்த்திப் போடப்பட்டிருக்கும் அல்பேஷா மரக்கட்டைகளுக்கு அருகேயும் அவனுடன் களிப்புடன் விளையாடி, அளவில்லாக் காதலுணர்வை அளவோடு பழகுவதன் மூலம் காட்டி, அவன் உருவம் முழுவதும் கண்களை உறுத்த, உள்ளமெல்லாம் அவனைப் பற்றிய உணர்வே வியாபிக்க, மாலையில் நடந்த காதற்பேச்சை காலையில் ரசித்துக் கொண்டிருந்த ஒரு நாள், கண்ணன் வந்தான். வேலையில் இருந்து விலகி விட்டதாகவும், இன்னொரு குப்பத்திற்குப் போய் அங்கே விசைப்படகு மீனவர்களால் அல்லல்படும் கட்டுமரக்காரர்களுக்கு உதவப் போவதாகவும், தெரிவித்தான். அவள் தந்தை, கட்டுமரங்களை மின்விசைப் படகால் மோதும்படி அவனுக்குச் சொல்வதும், அவன் ‘இனத்தை இனமே கொல்வதைவிட, நானே என்னை சாகடித்துக் கொள்ளலாம்’: என்று பதிலடி கொடுப்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும், “ஒன் நய்னா ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால கடல்ல மீன் பிடிக்கனுமுன்னு ‘லாஞ்சுக்கு’ வச்சுருக்கிற வழக்கத்தை மீறி... அப்பாவி கட்டு மரங்களோட... வலைங்கள, அறுக்கச் சொல்றாரு. நம்மளால ஒரு நொடிகூட இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு, அவள் எவ்வளவோ மன்றாடியதையும் பொருட்படுத்தாமல் கண்னன் போய்விட்டான்.

பின்னர் முனுசாமி, “ஒன்னோட கைதொட்டுப் பழகிட்டு அந்த காலிப்பய ஏற்கனவே கீப் பண்ணுனவளோட குடித்தனம் பண்ணப் போயிட்டான். நம்ம காவல் கன்னியம்மன் எதை வேணுமுன்னாலும் சகிச்சுக்குவா. ஆனால் காதல் துரோகத்தை மட்டும் சகிச்சுக்க மாட்டாள். வேணுமுன்னா பாரேன். இன்னும் மூணு நாளையில். அவனை. ஆத்தா என்ன பாடு படுத்தப்போறா பாரு!” என்று பக்குவமாகப் பேசினார். அவர் சொன்னது போல், கண்ணன், கட்டுமரத்தில் மீன் பிடிக்கப்போன போது, சுறா மீனால் தாக்கப்பட்டு ஒரு காலை இழந்து விட்டதாக அவளுக்கு சேதி போனது.

கண்ணனின் காதல் துரோகத்திற்கு, கன்னி காவலம்மன் தண்டனை கொடுத்துவிட்டதாக, அப்பனால் நம்ப வைக்கப்பட்டமச்சகாந்திக்கு திருமணம் முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/29&oldid=1383310" இலிருந்து மீள்விக்கப்பட்டது