பக்கம்:காகித உறவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

29


“இதை நீ ஏன் போலீஸ்ல சொல்லல!”

“மீண்டும் கலாட்டா வந்திருக்கும். என் ஒரு காலுக்காகப் பல தலையுங்க உருள்றத நான் விரும்பல. இந்த காலு பலருக்கு காலனா மாறுறத விரும்பல.” மச்சகாந்தி, ஆவேசத்துடன் எழுந்து, ஆவேசமாகக் கேட்டாள். “ஒன்னை மொச்சிக்கிட்டு இருந்த பொண்ணு யாரு?”

“என்னோட தங்கை”

“சரி, புறப்படு”

“எங்கே”

“இந்த நொடியில் இருந்து, நான் ஒன் சம்சாரம். புறப்படு காவலம்மன் சந்நிதியில் போய்... கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்லுவோம்... ஏன் பயப்படுற...”

“நான் பயப்படல. நீ இல்லாம என்னாலயும் வாழ முடியல. இருந்தாலும் நீயும் நானும் ஒண்னு தெரிஞ்சுக்கணும். நாம குடித்தனம் பண்ணலாம். ஒப்பனால ஒண்ணும் பண்ண முடியாது. ஒன் நயினா ஒதுங்குறது மாதுரி பாவலா பண்ணிட்டு. ஆள்பலம் உள்ள என்கிட்ட நேரடியா மோதாமல் கடலுல கட்டுமரத்தோட போறவங்க மேலே மோட்டார் படகை விட்டுப் பழி வாங்கப் பார்ப்பார். இதனால் அவருக்கும் ஆளு சேரும் பாரு... நம்ம தனிப்பட்ட காதலுக்காக நம்ம சமூகம் ரத்தக் காட்டேரியா மாறப்படாது.

“நீ மவராசியா இருக்கணும், ஒப்பன் எனக்கு பண்ணுன அக்கிரமம் வெளில வரப்படாது, இல்லன்னா, இன்னும் பல அக்கிரமம் நடக்கும்... போயிட்டுவா... என் ராசாத்தி...”

கண்ணனின் குரல், தழுதழுத்தது, கன்னி காவலம்மனுக்கு கற்பூர ஆராதனை நடந்தது. அவளுக்கு அவனுக்கே ஆராதனை செய்ய வேண்டும் போலிருந்தது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/31&oldid=1383316" இலிருந்து மீள்விக்கப்பட்டது