பக்கம்:காகித உறவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாரிச் சிங்கி


புகழ்மிக்க மலைக்கோவில் ஒன்றின் அடிவாரத்திற்கு அருகே ஒரு பூங்கா. மரம்விட்டு மரந்தாவும், காட்டின் ஜோக்கர்களான பத்துப்பதினைந்து குரங்குகள், எட்டடி நீளமும், மூன்றடி அகலமும், மூன்றடி உயரமுங் கொண்ட கம்பி வலையால் பின்னப்பட்ட இரும்புக் கூண்டுக்குள், கும்பலாக இருந்தாலும், ஒவ்வொன்றும் தனிமைப்பட்டது போல் தவித்துக் கொண்டிருந்தன. வானத்தை மோனமாக வெறித்துக் கொண்டிருந்தவை, வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவை, குட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்தவை, பிடித்த குட்டிகளை தள்ளிக் கொண்டிருந்தவை - இப்படி பல்வேறு நிலையில் பல குரங்குகளும், ஒரு குரங்கே, பல்வேறு நிலையிலுமாக, போராடி ஒய்ந்த களைப்பில், புரியாத எதிர்காலத்திற்குப் பயந்தவை போலவும், களிப்பான கடந்த காலத்திற்கு ஏங்குபவை போலவும், மெளனமே கொடுரமாக, மனிதனை எமனாக நினைத்து மயங்கிக் கொண்டிருந்தன.

இதற்கு முரணாக, ஏழெட்டு நரிக்குறவர்களும், குறத்திகளும் கூண்டுக்கு அருகே குதுகலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிழிந்த பிரம்புப்பாய் ஒன்றில், ஒர் இளங்குறத்தி டப்பாவுக்குள் கையைவிட்டு, டப்பாபோல் இருந்த தன் வயிற்றுக்குள் ஆகாரத்தை வாரி விட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கிழவி, தன் பெரிய உடம்புக்குள் சின்னப் பாவாடையை, அகலப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு இளங்குறத்தி ஒருத்தி, எந்த டாக்டரோ கொடுத்த வெள்ளைக்கோட்டை போட்ட ஜோரில், இரண்டு வயதுக் குழந்தையாக ஆன மாதிரி, தன் இரண்டு தோள்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு, புருஷன் தன்னைக் கவனிக்கிறானா என்ற நானங் கலந்த பார்வையை வீசிக் கொண்டே, பாவாடை முனையை லேசாகப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நடுத்தர வயதுப் பெண்கள், முழங்கை வரைக்கும் வியாபித்த, சட்டையா அல்லது ஜாக்கெட்டா என்று கண்டுபிடிக்க முடியாத அல்லது அவை இரண்டுஞ் சேர்ந்த புதிய உடுப்புக்களுக்கு மேலே, சூரிய காந்தி பூவைப் போல, அடுக் கடுக்காக, வட்டத்திற்குமேல் வட்டமாக படர்ந்திருந்த கருகுமணி மாலை, வெள்ளைப்பாசி மாலை, சிவப்புப்பாசி மாலை, மஞ்சள் மணி மாலை முதலிய மாலைகள் சகிதமாய், காவிப்பற்கள் மாலை வெயிலில் பட்டு, வானவில் போல் ஜொலிக்க உட்கார்ந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/32&oldid=1384252" இலிருந்து மீள்விக்கப்பட்டது