பக்கம்:காகித உறவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

33


வரவழைத்தார், கோவிலுக்கு வரும், பக்தர்களின் வாழைப்பழம் தேங்காய் வகையறாக்களை தட்டிப் பறித்து முன்னேறிய குரங்குகள் இப்போது வரிசை வரிசையாக மட்டுமல்லாமல் முன்வரிசை பின் வரிசையாகவும் இருந்த கடைகளில் உள்ள வாழைப்பழங்களையும், தேங்காய்களையும் பகிரங்கமாகத் திருடுவதோடு, மாலைகளையும் எடுத்துக் கொண்டு போய், பல்லைக் காட்டின. இதனால் மேலும் பல்லைக்கடிக்க முடியாத கடைக்காரர்கள் சங்கம், குரங்குகளிடமிருந்து தங்கள் பொருளாதாரத்தைத் காக்க வேண்டுமென்றார்கள். பஞ்சாயத்துக்காக கட்டப்படுவதாக இருந்த லைசென்ஸ் பணம், கடைவரி தொழில்வரி முதலிய வரித்தொகையை பஞ்சாயத்துக்குப் பதிலாக, குரங்குகளுக்கு கட்டுவதாகக் கூக்குரலிட்டார்கள். அவர்களிடம் வரிபாக்கி இருப்பதுபோல், ஒட்டு இருப்பதையும் உணர்ந்த பஞ்சாயத்துத் தலைவர், இந்த நரிக்குறவர்களை ஆற்காட்டிற்குப்போய் கூட்டி வந்தார். ஒரு குரங்குக்கு மூன்றரை ரூபாய்; பெரும்பாலான குரங்குகள் பிடிபட்டதும், அவற்றை லாரியில் ஏற்றி அவை திரும்பி வரமுடியாத தொலைவில் உள்ள ஏதாவது ஒரு காட்டில் கொண்டு விடுவதாக ஏற்பாடு.

சூரியன் மலையுச்சிக்கு நேர்கோடு போல் வந்துவிட்டது. இன்னும் அவர்கள் வேலையைக் கவனிக்காமல் இருப்பதைப் பார்த்து உறுப்பினர்கள் சகிதமாக வந்த தலைவர் ஆத்திரப்பட்டார்.

‘ஏய். செங்கோடா... இந்தாடா பணம்’

‘அல்லா கொரங்கோயும். பிட்ச பொறவு தாங்கோ சாமி’

‘இது குரங்குக்கு இல்லேடா... ஒங்களுக்கு. மரியாதயாய்... இந்தப் பணத்துல... உடனே பஸ் பிடிச்சி... ஆற்காட்டுக்கு... போய்ச் சேருங்க. ‘டான்ஸ்’ ஆடுற நேரமாடா இது.

அப்போதுதான் நரிக் குறவர்கள் சுதாரித்தார்கள். ஷோக்காட்டாள் எம்டியாக போனதோடு, அடிவாரமும் தேய்ந்து போன டப்பாவை, முந்தானையால் டப்பாவுக்குள் துடைத்துவிட்டு, அவசர அவசரமாக கூண்டுப் பக்கம் போனாள். இரும்பு கூண்டை சற்று நகர்த்தி, அதை இன்னொரு கூண்டின் வாய்ப்பக்கம் கொண்டு போய் இடைவெளியைக் குறைத்து, குரங்குகளை கம்பிவலைத் துவாரங்கள் வழியாக, ஒரு கம்பை விட்டு லேசாக அடிக்க, குரங்குகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்

கா.3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/35&oldid=1383335" இலிருந்து மீள்விக்கப்பட்டது