பக்கம்:காகித உறவு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

லாரி சிங்கி

சகாக்கள் அவளைத் தள்ளி வைப்பார்கள். தள்ளி வைக்கப்படும் குறத்தியின் நிலைமை கும்பலில் இருந்து தள்ளப்பட்ட குரங்கின் நிலையைவிடப் பரிதாபமானது.

லாரிச்சிங்கி, இப்போது ஒரு முடிவுக்கு வந்தாள். தள்ளப்படுமுன்னே, அவளே தன்னைத் தள்ளிக்கொண்டால் என்ன? ஒதுக்கப்படும் முன்னே ஒதுங்கிக் கொண்டால் என்ன? சகாக்களின் தண்டனையைத் தாங்க முடியாது. அது எந்தத் தண்டனையை விடவும் மோசமாகத்தான் இருக்கும்.

குறவர்கள் அடிவாரத்திற்கு வந்திருக்க வேண்டும். கூக்குரல் கேட்டது. லாரிச்சிங்கி, குழந்தையை எடுக்கப்போனாள். பிறகு சிறிது யோசித்தாள். தனிப்பட்டுப் போன தன்னோடு, அந்த குழந்தை இருக்க வேண்டாம். அவன் நன்றாக இருக்க வேண்டும். வயிறார உண்வேண்டும். குறவர் உறவோடும், ஊரோடும் அவன் ஒத்து வாழ வேண்டுமே அன்றி, செத்து வாழப்போகும் அவளோடு இருக்கலாகாது. இனிமேல் இவனைப் பார்ப்போமோ... பார்க்க முடியுமோ என் ராசா... மாரி மீனாட்சி தந்த மாரிக்கொழுந்தே... போறேண்டா... போறேண்டா... ஒன்ன பாக்கோ மொடியாட்டாலும். ஒன்ன பெத்தோ இந்தோ வயிறு இருக்கோ... அதே அட்சிக்கிட்டே இருப்போண்டோ... இருப்போண்டோ...

குறவர் கோஷ்டி நெருங்கிக் கொண்டிருப்பது காலடிச் சத்தத்தாலும் வாயடி ஒசையாலும் நன்றாகக் கேட்டது.

லாரிச்சிங்கி, பூங்கா சுவரில் ஏறி பின்னால் இருந்த சாக்கடைப் பாதை வழியாக ஓடினாள். குட்டியை அதற்கு வலி கொடுக்குமளவுக்கு அனைத்துக் கொண்டே அவளைப் பரிதாபமாகப் பார்த்த அதே தாய்க்குரங்கைப் பார்த்துவிட்டு, அழாமல், அழமுடியாமல் ஓடினாள். குரங்குகளை கும்பலில் சேர்த்த திருப்தியிலும் கும்பலில் இருந்து பிரிந்த துயரமும் குட்டியைக் குரங்கோடு சேர்ந்த மகிழ்ச்சியும், தன் குட்டிச் செல்வத்தை உயிருடன் பறிகொடுத்த வேதனையும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற அச்சங்கலந்த ஆவலும், மொத்தத்தில் மனிதனுக்கு எத்தனை உணர்ச்சிகள் உண்டோ, அத்தனை உணர்ச்சிகளும் அவளை ஆட்கொள்ள, செம்பவள நிறங்கொண்ட, செண்பகப் பூ முகங்கொண்ட லாரிச்சிங்கி லாரியில் பிறந்த அந்த குறப்பெண், இப்போது லாரியைவிட வேகமாக ஒடிக்கொண்டிருக்கிறாள்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/42&oldid=1383374" இலிருந்து மீள்விக்கப்பட்டது