பக்கம்:காகித உறவு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சனிக்கிழமை


சொன்னதையே சொல்லிக்கிட்டிருந்தால் என்ன சார் அர்த்தம்? இப்ப சொல்றது பைனல். இனிமேல் சனிக்கிழமை கல்லூரி நடக்கக் கூடாது. நான் என், எலெக்க்ஷன் அறிக்கையில் சனிக்கிழமையை விடுமுறை நாளாய் ஆக்குறதாய் வாக்குறுதி கொடுத்திட்டேன். என் வாக்கை நான் காப்பாற்றியாகணும்.

வைஸ்-பிரின்ஸிடாலால் இதற்கு மேல் தாங்க முடியவில்லை. இந்த கோபாலை சின்னப் பையனாக இருக்கும் போதே அவருக்குத் தெரியும். ஒர் ஏழைப்பையன். தங்கள் எதிர் காலத்தையே இவனிடம் ஒப்படைத்திருக்கும் ஒரு வறுமைக் குடும்பத்தின் மூத்த பையன் நல்ல நிலைக்குப் போகத் தகுதியுள்ள ஓர் இன்டலிஜென்ட் பாய், கெட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை அவரால். இருக்கையை விட்டு எழுந்து, கத்தினார் :

'கோபால், ஒன் மனசில் என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கே? காலேஜ் யூனியன் தேர்தலை, பார்லிமெண்ட் தேர்தல் மாதிரியும், நீ ஏதோ பெரிய அரசியல் தலைவராய் ஆகிட்டது மாதிரியும் பேசுறியே. இது நல்லா இல்லே. டோண்ட் பி எ ஸில்லி. தேர்தல் வாக்குறுதியாம். நிறை வேற்றணுமாம். பொல்லாத தேர்தல். பொல்லாத வாக்குறுதி. ஐ...ஸே...கோ.டு.யுவர்...கிளாஸ்.'

கோபாலுக்கு லேசான அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி, கோபத்தில் அதிர்ந்தது. வைஸ்-பிரின்ஸிபாலை, கண்களை உருளைக்கிழங்கு மாதிரி வைத்துக் கொண்டு, முறைத்தான். வைஸ்-பிரின்ஸிபால் அவன் பார்வை தாளமாட்டாது, வேறு பக்கமாக முகத்தை வைத்தபோது, செயலாளர் ராமு, கல்லூரி முதல்வரை நோக்கி, அமைதியாகச் சிரித்துக் கொண்டே சீரியஸாகக் கேட்டான் :

'ஸார் எங்களுக்கு ஒன்று தெரிஞ்சாகணும். நீங்க பிரின்ஸிபாலா. இல்லே இவரா?. இவரு இப்போ மன்னிப்புக் கேட்கணும். இல்லைன்னா...' - உடனே அங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள், வைஸ் பிரின்ஸிபால் மன்னிப்புக் கேட்கணும் இல்லைன்னா, 'ஸ்டிரைக்'. இல்லைன்னா ஸ்டிரைக்' என்று கத்தினார்கள். சில மாணவர்கள் வகுப்புக்களில் இருந்த மாணவர்களைக் கூப்பிடுவதற்காக ஓடினார்கள். இதற்குள் பாடங்களை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும், வகுப்புக்களில் தூங்காமல் இருந்த மாணவர்களும், அங்கே ஒடி வந்தார்கள். ஒரே பரபரப்பு ஒரே கத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/52&oldid=1383572" இலிருந்து மீள்விக்கப்பட்டது