பக்கம்:காகித உறவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சனிக்கிழமை


கல்லூரி முதல்வர் எதை நினைத்தோ அல்லது தற்செயலாகவோ தலையாட்டியபோது, அவர், தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக மாணவர்கள் நினைத்து வெற்றி வெற்றி. என்று சொல்லிக் கொண்டே கோபாலையும் ராமுவையும், ரெண்டு பேர் தூக்கி வைத்துக் கொண்டு போனார்கள். இதரர்களில் பலர் விசிலடித்தார்கள்; சிலர் நாட்டியம் ஆடினார்கள். வெற்றியாச்சே விடமுடியுமா?

மாணவர்கள் அட்டகாசமாய்ப் போவதை ஆசனத்தில் அட்டை போல் ஒட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த முதல்வரால் வைஸ்-பிரின்ஸ்பாலை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எங்கேயோ பார்த்துக்கொண்டே அவருக்குச் சமாதானம் சொன்னார் :

"ஐ ஆம் ஸாரி மிஸ்டர் வெங்கு. இவங்களுடைய போக்கு விசித்திரமா இருக்கு. நானும் காலேஜ்ல ஸ்டூடண்ட் லீடராய் இருந்திருக்கேன். பல ஸ்டிரைக்கை நடத்தி இருக்கேன். அதுல, நாட்டுப் பிரச்னை இருந்தது. ஒரு லட்சியம் இருந்தது. எப்போதும் ஆசிரியர்களுக்கு எதிராய் நடந்தது கிடையாது.

'இப்போ காலம் மாறிட்டுது, ஆனாலும் இந்த பையன்களை என்னால் வெறுக்க முடியல. இவர்களின் கொட்டம், ஒரு நோயின் அறிகுறியே தவிர, நோயல்ல. சமுதாய அமைப்பில் ஏதோ ஒரு மூலையில், எப்படியோ ஏற்பட்ட ஒரு ஒட்டை. இவன்களையும் பிடிச்சுக் கிட்டிருக்குது. அந்த ஒட்டையைக் கண்டுபிடித்து அடைச்சால்தான் இவங்களையும் அடக்க முடியும் இல்லை மீட்க முடியும். இப்போ, நாம் பெற்ற பிள்ளைகளே, நாம் நம் அப்பா அம்மாவிடம் நடந்தது மாதிரி நடக்குதா? டோன்ட் டேக் இட் ஸீரியஸ்லி..”

வைஸ் பிரின்ஸிபால் எழுந்தார்; விரக்தியோடு பேசினார்.

"இந்த நாட்ல, குறிப்பாக, இந்த ஊர்ல, ஒண்டக்கூட திண்னை கிடைக்காமல் எத்தனையோ ஏழைங்க ரோட்ல படுக்கறாங்க. இந்த தரித்திர நாராயனர்களை நினைத்துப் பார்க்காதது மாதிரி இவங்க ஆடுறதையும், பாடுறதையும் நினைத்தால், அந்த ஏழைங்களையே, இவங்க இன்ஸ்ல்ட் பண்ணுறதாய் நினைக்கிறேன். அதனால, என்னை இன்ஸல்ட் பண்ணுனதை நான் பெரிசா நினைக்கல. கருமாதி வீட்டுக்குக் கல்யாண டிரஸ்ல போற பசங்க. ஐ டோண்ட் கேர்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/54&oldid=1383582" இலிருந்து மீள்விக்கப்பட்டது