பக்கம்:காகித உறவு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பிறக்காத நாட்கள்



ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை மூன்று மணிக்குப் பிறந்தாலும், பிரமுகர்களின் வருகைக்குச் சாதகமாகவும் காலைக் குளிரை முன்னிட்டும், ஏழு மணிக்கு கேக் வெட்டுவதற்காக, பாலியெஸ்டர் துணியோடு பாதி வீங்கிப் போனவன் போல் தோன்றிய குமார், கேக் கில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது மெழுகுவர்த்திகளையும் ஊதிவிட்டு, ஒரு கத்தியை எடுத்து, வெட்டிய போது கரவொலி எதிரொலிக்க, அதற்கு சளைக்காதனபோல் ரேடியோகிராமில் 'மன்னவன் பிறந்தானடி' என்ற பாட்டு ஒலித்தது.

மூன்று மணிக்குப் பிறந்த பையனின் பிறந்த நாளைக் கொண்டாட ஏழு மணிக்கு வந்த உறவினர்களுக்கு உண்ணக் கொடுக்க அதிகாலை இரண்டு மணிக்கே வந்துவிட்ட காத்தாயி, தன் பத்து வயதுப் பையன் முனுசாமியுடன் சற்று ஒதுங்கி நின்றாள். பங்களாவில் மொஸைக் தரையைப் பெருக்கித் துடைத்துவிட்டு, நாற்காலிகளை வரிசையாகப் போட்டு விட்டு, எவர்சில்வர் தட்டுக்களை கழுவிவிட்டு, சமையல்காரருக்கு மைதாவில் இருந்து சர்க்கரை வரை எடுத்துக் - கொடுத்து ஒத்தாசை செய்தவள். அவள் பக்கத்துக் குப்பத்தில் வாழ்பவள் என்றாலும், அவளும் ஒரு வகையில் பங்களாகாரிதான் பயனற்றதாகக் கருதப்படும் இரவுப் பொழுதை மட்டுந்தான் குடிசையில் கழிப்பவள். பயனுள்ள பகல் பொழுதை, பங்களாவில் செலவிடுபவள். பாத்திரம் தேய்ப்பதிலிருந்து எஜமானருக்கு அலுவலகத்திற்குச் சோறு கொண்டு போவது, மாவு ஆட்டப்போவது, குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளுவது, துணிமணிகளைத் துவைப்பது முதலியவை, அந்த அரைப் பங்களா வாசியான காத்தாயியின் பொழுதுபோக்குகள். அப்படிப்பட்ட காத்தாயி, தான் பெற்ற பிள்ளைக்கு இப்படி ஒரு விழா இருந்திருந்தால்கூட, அப்படி மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டாள். வாயெல்லாம் பல்லாக, தன் பையனின் வலதுகைப் பெருவிரலை இடதுகையால் நெருடி விட்டுக் கொண்டே நின்றாள்.

அவள் அங்கே நிற்பதை அபசகுனமாக நினைத்தோ அல்லது ஆக வேண்டிய காரியங்கள் ஆக வேண்டுமென்று நினைத்தோ மிஸஸ் வளர்மதி காத்தா!. இப்படி நின்னா என்ன மீனிங்? போய்த் தட்டுக்கள் கொண்டு வா என்று சொன்னதும், காத்தாயி உள்ளே ஓடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/60&oldid=1383290" இலிருந்து மீள்விக்கப்பட்டது